இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. பெங்களூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 46 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா மற்றும் கான்வேவின் அபார சதத்தால் 402 ரன்களுக்கு அவுட்டானது. 

நியூசிலாந்துக்கு 107 ரன்கள் டார்கெட்:


இந்த நிலையில், நெருக்கடியான கட்டத்தில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணிக்காக முன்னணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை தந்தனர். ரோகித்சர்மா 52 ரன்கள் எடுக்க, விராட் கோலி 70 ரன்கள் எடுத்தார். இன்று 4வது நாள் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரிஷப்பண்ட் - சர்பராஸ்கான் ஆதிக்கம் செலுத்தினர். 


இருவரும் சேர்ந்து பவுண்டரி, சிக்ஸர் அடிக்க இந்திய அணி ஸ்கோர் மளமளவென எகிறியது. இந்த நிலையில், இந்திய அணி 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி நியூசிலாந்தை விட 106 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. இந்திய பந்துவீச்சாளர்களின் கையிலே தற்போது இந்தியாவின் வெற்றி அடங்கியுள்ளது. 

462 ரன்னுக்கு ஆல் அவுட்:


முதல் இன்னிங்சில் இந்தியா வெறும் 46 ரன்கள் எடுத்ததாலும், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்ததாலும் இரண்டாவுது இன்னிங்சில் 462 ரன்கள் குவித்தும் இலக்காக வெறும் 107 ரன்கள் மட்டுமே நிர்ணயிக்க முடிந்தது.


இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவிற்காக அதிகபட்சமாக சர்பராஸ் கான் 150 ரன்களும், ரிஷப்பண்ட் 99 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி, ரோகித், ஜெய்ஸ்வால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, பின்வரிசையில் முக்கிய வீரரான கே.எல்.ராகுல் 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா, அஸ்வினும் சொற்ப ரன்களில் அவுட்டாக 408 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்த இந்தியா 462 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மேட் ஹென்றி, வில்லியம் ஓ ரோர்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


பந்துவீச்சில் அசத்துமா இந்தியா?


இந்திய அணியினர் இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வேண்டியது அவசியம் ஆகும். பும்ரா, சிராஜ் மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்கள் என்பதால் பும்ரா, சிராஜ் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். சுழல் ஜாம்பவன்களான அஸ்வின், குல்தீப் மற்றும் ஜடேஜா சுழல் மாயாஜாலம் நடத்தினால் மட்டுமே இந்தியா வெற்றி பெற முடியும். 4வது நாளான ஆட்டத்தின் முடிவில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. 


கடைசி நாளான மழை பெய்தால் ஆட்டம் முழுவதும் கைவிடப்படும். போட்டி நடைபெற்றால் சவால் மிகுந்ததாக இருக்கும். நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை டாம் லாதம், கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, ப்ளிப்ஸ், மிட்செல், ப்ளண்டெல், சவுதி என நீண்ட பேட்டிங் ஆர்டர் உள்ளது. இவர்களை அவுட்டாக்கி டெயிலண்டர்களையும் அவுட்டாக்கினால் மட்டுமே இந்தியாவின் வெற்றி சாத்தியம் ஆகும்.