Women's T20 World Cup 2024: மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.


மகளிர் டி20 உலகக் கோப்பை 


ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை துபாயில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குரூப் ஏ-வில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில்,  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.


இந்தியா - பாகிஸ்தான் மோதல்:


இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. பரம எதிரிகளாக கருதப்படும் இரு அணிகளும் மோதும்போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே, பாகிஸ்தான் அணி தான் விளையாடிய முதல் லீக் போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதேநேரம், இந்திய அணியோ தனது முதல் லீக் போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியுற்றது. இதனால், அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்க இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெறுவதோடு, அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான அணி உள்ளது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஹாட் ஸ்டார் அலைவரிசையிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


அணிகளின் நிலவரம் என்ன? 


இந்தியா vs பாகிஸ்தான் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் சொதப்பியதே, கடந்த போட்டிக்கு தோல்வியாக அமைந்தது. எனவே, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ர்க்ஸ், ஷஃபாலி வர்மா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத்தின் செயல்பாட்டில் தான் இந்தியா அணியின் வெற்றி தோல்வி இன்று தீர்மானிக்கப்படும். கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதேநேரம், பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய, சதியா இக்பால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம்.


நேருக்கு நேர்:


சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 12 முறையும், பாகிஸ்தான் அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.


பிட்ச் ரிப்போர்ட்:


துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மேற்பரப்பு மிகவும் சமநிலையில் உள்ளது. அதன்படி, பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருதரப்புக்கும், பிட்ச் சாதகமாக இருக்கும். எனவே,  முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து இலக்கைத் துரத்துவது டாஸ் வெல்லும் அணியின் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். 


உத்தேச பிளேயிங் லெவன்:


இந்திய பெண்கள்: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர்(சி), ரிச்சா கோஷ்(வ), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ஆஷா சோபனா, ராதா யாதவ், ரேணுகா சிங்.


பாகிஸ்தான் பெண்கள்: அலியா ரியாஸ், முனீபா அலி (வாரம்), குல் பெரோசா, சித்ரா அமீன், ஒமைமா சோஹைல், சனா பாத்திமா (கேட்ச்), துபா ஹாசன், சையதா அரூப் ஷா, டி ரூபாப், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.