சேலம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேசனின் 64 ஆவது ஆண்டு விழா சேலம் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சேலம் கிரிக்கெட் அசோசியேஷனில் சிறந்த விளையாடிய கிரிக்கெட் வீரர்களை பாராட்டி பரிசு நடராஜன் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைச் செயலாளர் பாபா, முன்னாள் செயலாளர் ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, சேலம் கிரிக்கெட் அசோசியேஷன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர். கிரிக்கெட்டுக்கு என்னை போன்று பலர் சேலத்தில் இருந்து வர வேண்டும். அதுதான் எனது ஆசை. தொடர்ச்சியாக அனைவரும் சாதனை படைக்க வேண்டும். உங்களுக்கான பல வாய்ப்புகள் இங்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே அனைத்தையும் கற்றுக் கொள்ளுங்கள், கூச்சப்படாமல் பேசுங்கள் வாயை திறந்து பேசினால் மட்டுமே உங்களுக்கானது கிடைக்கும்.  


உங்களது சந்தேகங்களை தயங்காமல் அனைவரும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நான் ரொம்ப சை டைப். யாரிடமும் பேச மாட்டேன். ஆனால் இப்போது நிறைய பேசுகிறேன். நான் எங்கு சென்றாலும் அனைவரிடத்திலும் முதலில் கூறுவது நிறைய பேசுங்கள், சந்தேகங்களை கேளுங்கள் என்பதுதான். கடின உழைப்பு தன்னம்பிக்கையையும் விட்டுவிடக்கூடாது. நம்மிடம் திறமைக்கு பஞ்சமில்லை. அதை எப்படி வெளி கொண்டு வருகிறோம் என்பது உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் வாழ்க்கையில் மேலே வர வேண்டும் என்றால் படிகளைக் கடந்து தான் வர முடியும். ஒவ்வொரு தடைகளையும் படிகளாக பாருங்கள், அப்போதுதான் அடுத்த இடத்திற்கு நம்மால் செல்ல முடியும். இலக்கை நோக்கி பயணிக்கும் போது எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளை சவாலாக ஏற்று பயணிக்க வேண்டும் என்றார்.



நான் என் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு உள்ளேன். பஸ்க்கு காசு இல்லாமல், உணவில்லாமல் இருந்துள்ளேன். சேலத்தில் எங்கோ இருக்கும் சின்னப்பம்பட்டியில் இருந்து நான் வந்துள்ளேன் என்றால், சேலத்தில் உள்ள உங்களாலும் வர முடியும். இங்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி என்னைப் போன்று பல நடராஜன் வரவேண்டும். 


உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். உடலை வைத்திருப்பதன் மூலம் நமக்கு அது தன்னம்பிக்கையை கொடுக்கும். விளையாட்டில் காயம் ஏற்படுவது சகஜம்தான். இதுவரையும் இன்று முறை அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இப்போது என் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு இதெல்லாம் சகஜம்தான். இங்கிருந்து பலர் மாநிலத்திற்காகவும், தேசத்திற்காகவும் விளையாட வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று கூறினார்.