மகளிர் ஆசிய கோப்பை தொடர் தற்போது பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி மலேசியா அணியை எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் மேக்னா மற்றும் ஷெஃபாலி வெர்மா ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 116 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய மேக்னா 53 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உள்பட 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ஷெஃபாலி வெர்மா 39 பந்துகளில் 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி உதவியுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் 5 பவுண்டரிகள் மற்ரும் ஒரு சிக்சர் விளாசி 19 பந்துகளில் 33* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்காரணமாக இந்திய மகளிர் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசிய அணி முதல் ஓவரிலேயே தொடக்க வீராங்கனை வின்ஃபிரட் துரைசிங்கம் ரன் எதுவும் எடுக்காமல் திப்தி சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து ஆட்டத்தின் 4வது ஓவரில் ராஜஸ்வரி கெய்க்வாட் பந்துவீச்சில் வான் ஜீலியா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 5.2 ஓவர்களில் மலேசிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதன்காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இதன்காரணமாக டிஎல் முறை பயன்படுத்தப்பட்டது. அதன்படி மலேசிய அணி 5 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் மலேசிய அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இந்திய மகளிர் நாளை நடைபெறும் போட்டியில் ஐக்கிய அமீரகத்தை எதிர்த்து விளையாட உள்ளது.
மேலும் படிக்க: யூசுப் பதானை தள்ளிவிட்ட மிட்செல் ஜான்சன்...! மைதானத்திலே நடந்த மோதல்..! வைரலாகும் வீடியோ..