ஆடவர் கிரிக்கெட்டிற்கு இணையாக பல்வேறு சாதனைகளும், சரித்திரங்களும் மகளிர் கிரிக்கெட்டில் படைக்கப்பட்டு வருகிறது. அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஐ.சி.சி. தொடர்ந்து பல்வேறு தொடர்களையும், உலகக்கோப்பை போட்டிகளையும் நடத்தி வருகிறது.
இன்று தொடங்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை:
இந்த சூழலில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த 9வது மகளிர் டி20 உலகக்கோப்பை இன்று தொடங்குகிறது. வங்கதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக இந்த போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜாவிற்கு மாற்றப்பட்டது.
இன்று நடக்கும் முதல் போட்டியில் வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி முடிந்த பிறகு இதே மைதானத்தில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.
வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
முதல் நாளான இன்று குழு ஏ மற்றும் குழு பி பிரிவில் தங்கள் முதல் போட்டியைத் தொடங்கும் இந்த 4 அணிகளும் வெற்றியுடன் தங்களது ஆட்டத்தை தொடங்க வேண்டும் என்று முனைப்புடன் ஆடுவார்கள். குறிப்பாக, தங்கள் நாட்டில் நடக்க வேண்டிய உலகக்கோப்பைத் தொடர் வேறு நாட்டிற்கு மாறியிருப்பதால் வங்கதேச அணியினர் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் ஆடுவார்கள். இதனால், இந்த இரு போட்டிகளுக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
வங்கதேசம் - ஸ்காட்லாந்து:
வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகளுக்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரக மண்ணில் ஆடிய அனுபவம் ஸ்காட்லாந்த அணியைகாட்டிலும் வங்கதேச அணிக்கு அதிகம் என்பதால் அவர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு அதிகளவில் உள்ளது. அந்த அணிக்கு பலமாக கேப்டன் நிகர் சுல்தானா, திலாரா அக்தர், சோபனா, ரிது ஆகியோர் உள்ளனர். ஸ்காட்லாந்து அணிக்கும் சாரா ப்ரைஸ், கேத்ரைன் ப்ரைஸ், டார்சி கார்டர், ரேச்சல் முக்கிய வீராங்கனைகளாக உள்ளனர்.
பாகிஸ்தான் - இலங்கை:
பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையேயான போட்டியில் இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளது. பாகிஸ்தான் அணியில் கேப்டன் சனா, முனிபா அலி, நிதா தார், கல் பெரோசா முக்கிய வீராங்கனைகள் ஆவார்கள். இலங்கை அணியில் கேப்டன் சமரி அட்டபட்டு, அனுஷ்கா, விஷ்மி குணரத்னே, கவிஷா, நிலக்ஷி முக்கிய வீராங்கனைகளாக உள்ளனர்.
எப்படி பார்ப்பது?
இந்தியாவில் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கண்டுகளிக்கலாம். ஓடிடி தளத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தன்னுடைய முதல் போட்டியில் நாளை விளையாடுகிறது. இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் வலுவான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாயில் நாளை மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது.
மொத்தம் 23 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி துபாயில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. குழு ஏ மற்றும் குழு பி-யில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.