அமெலியா கெரின் ஆல்ரவுண்ட் பர்ஃபார்மன்ஸ் மற்றும் நியூசி. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால், ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, குரூப் 1 இல் நல்ல ரன் ரேட் முன்னேற்றத்தை கண்டுள்ளது.


டி20 உலகக்கோப்பையின் 2வது பெரிய தோல்வி


இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 4 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 தோல்வி பெற்று, 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கையும் இதே புள்ளியை கொண்டிருந்தாலும், அதன் ரன் ரேட் இந்த பெரும் தோல்வியின்மூலம் வெகுவாக குறைந்துள்ள காரணமாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. சுசி பேட்ஸ் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 110 ரன்களை சேர்த்த நிலையில், நியூசிலாந்து அணியின் மூன்றாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. இதன்மூலம் நியூசி அணி, 3 விக்கெட் இழந்து 162 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, 60 ரன்களுக்கு சுருண்டு, அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதன்மூலம் அந்த அணி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது பெரிய தோல்வியை சந்தித்தது.



13வது ஓவரில் இருந்து அதிரடி


இலங்கை அணியின் பந்துவீச்சு டர்ன் ஆகாமல் நேராக வந்த நிலையில், லெக் சைடில் பவுண்டரிகளை அடித்து தள்ளினார் நியூசி வீராங்கனை பெர்னாடின் பெசுய்டன்ஹவுட். அவர் 20 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில், அச்சினி குலசூரிய பந்தில் தவறான ஷாட் மூலம், மிட்-ஆஃபில் சாமரி அதபத்துவிடம் கேட்ச் கொடுத்தார். அப்போது நியூசிலாந்து 46/1 என்று இருந்தது. அதன் பிறகு ஜோடி சேர்ந்த பேட்ஸ் மற்றும் கெர் கடந்த போட்டியில் விட்ட அதே இடத்தில் இருந்து துவங்கி அதிரடியை காட்டினர்.  தொடக்கத்தில் மெதுவாக ஆரம்பித்த ஜோடி, அதபத்துவின் 13வது ஓவரில் அதிரடியை துவங்கினர். 


தொடர்புடைய செய்திகள்: Crime: 'வேலைக்கு வரமாட்டியா’ - நடுரோட்டில் 16 வயது சிறுமியின் முடியை பிடித்து தரதரவென இழுத்து சென்ற கடைக்காரர்..


மோசமான ஃபீல்டிங்


நியூசி அணி இந்த அளவுக்கு ரன் குவிக்க மற்றொரு காரணம் இலங்கையில் மந்தமான ஃபீல்டிங்கும்தான். பெசுய்டன்ஹவுட் முதலில் கொடுத்த இரண்டு வாய்ப்பையும் இலங்கை தவறவிட்டது. அடுத்ததாக நிலாக்ஷி டி சில்வா, பேட்ஸ் கொடுத்த கேட்சையும், ரன்-அவுட்டையும் தவறவிட்டார். கெர் தனது முதல் T20I அரை சதத்தை 40 பந்துகளில் எட்டினர். மேலும் பேட்ஸ் தனது 24வது அரை சதத்தை இறுதி ஓவர்களில் கடந்தார். கடைசி ஓவரில் பேட்ஸ் 49 பந்துகளில் 56 ரன்களில் ஸ்டம்பிங் ஆகியும், கெர் 48 பந்துகளில் 66 ரன்களில் ரன் அவுட் ஆகியும், அணி நல்ல ரன்னை எட்டியது. 






மளமளவென சரிந்த இலங்கை


தொடர்ந்து ஆடிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்களில் இருந்தது, அதன் பிறகுதான் சரிவு துவங்கியது. அடுத்த 38 ரன்களில் மொத்த 10 விக்கெட்டையும் இழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்ஷித சமரவிக்ரம (8) ஈடன் கார்சனின் பந்து வீச்சில் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் பேட்ஸ் மிட்-ஆனில் இருந்து 17 வயதான விஷ்மி குணரத்னேவை டக் அவுட் செய்ய அணி திக்குமுக்காட துவங்கியது. யார்க்கர் பந்தில் நிலாக்ஷி டி சில்வா டக் அவுட்டாக, இலங்கை 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது. அதன்பிறகு விக்கெட்டுகள் ஒருபுறம் விழ, அதபத்து (19) மட்டும் சிறிது நேரம் தக்குபிடித்து ஒருபுறம் ஆடினார். ஆனால் அவரையும் அமெலியா கெர் எல்பிடபிள்யூ-விற்கு ரிவ்யூ எடுத்து வீழ்த்தினார். மல்ஷா ஷெஹானி (10) மற்றும் இனோகா ரணவீர (5) ஆகியோர் மட்டுமே பேட்டால் ஒருசில பந்தை சரியாக எதிர்கொண்ட வெகுசில வீரர்கள். அமெலியா கெர் மற்றும் லியா தஹுஹு தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஈடன் கார்சன், ஜெஸ் கெர், ஹன்னா ரோவ், ஃபிரான் ஜோனாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அமெலியா கெர் தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்திற்காக 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.