வேலையை விட்டு நின்ற சிறுமியை கடைக்காரர் ஒருவர் தரதரவென நடுரோட்டில் இழுத்து சென்ற சம்பவம் சத்தீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் மாவட்டம் ஹுடியரி பகுதியில் ஓம்கர் திவாரி  என்ற நபர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் 16 வயது சிறுமி ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே  சம்பள விவகாரம் தொடர்பாக  சிறுமிக்கும் கடைக்காரருக்கும் இடையே மோதல் நிலவி வந்ததாக சொல்லப்படுகிறது. 


இதனால் கோபத்தில் சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமி மளிகைக்கடைக்கு வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். அதேசமயம் அந்த சிறுமியை தன்னுடன் வேலைக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு சிறுமியின் தாயிடம் ஓம்கர் திவாரி கேட்டு கொண்டுள்ளார். இதற்கு சிறுமியின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.


இதனால் ஓம்கர் திவாரி கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனிடையே மதுபோதையில் சிறுமியின் வீட்டிற்கு கடைக்காரர் வந்துள்ளார். அங்கு சிறுமியிடம் ஓம்கர் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த  சிறுமி சத்தம் போட்டுள்ளார். உடனடியாக வந்த சிறுமியின் தாயார் உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஓம்கருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


அப்போது குடும்பத்தினரை தாக்கிய அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சிறுமியை தாக்கியுள்ளார். தொடர்ந்து சிறுமியின் தலைமுடியை பிடித்து எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலையில் தரதரவென்ற இழுத்து சென்றுள்ளார். மேலும் தான் வைத்திருந்த கத்தியைக் கொண்டு தாக்க சிறுமிக்கு ரத்த காயம் ஏற்பட்டது. 


இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கடைக்காரர் ஓம்கரை கைது செய்தனர். அதேசமயம் கத்தியால் தாக்கப்பட்ட சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.