மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியை இன்று கேப் டவுன் நகரிலுள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா அணி தனது சொந்த மைதானத்தில் தங்களது முதல் சாம்பியன்ஷிப்பை வெல்லும் நோக்கில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில், பலமிக்க ஆஸ்திரேலியா அணி நடப்பு சாம்பியன் பெற்ற பெருமையை தக்கவைக்க விரும்பும்.
2023 மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மகளிர் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், ஒரு போட்டிகளில் கூட தோற்கவில்லை. குரூப் ஏ பிரிவில் நடந்த நான்கு போட்டிகளையும் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலிய அணி, அரையிறுதியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மறுபுறம், தென்னாப்பிரிக்கா தாங்கள் விளையாடிய லீக் போட்டிகளில் நான்கில் இரண்டு போட்டிகளில் வென்று ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதிபெற்றது. அரையிறுதியில் சுனே லூஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து இன்று முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் களமிறங்கியுள்ளது.
இந்தநிலையில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இன்றைய இறுதிப்போட்டிக்கு முன்னதாக, போட்டி நடைபெறும் நியூலேண்ட்ஸ் மைதானத்தை பற்றிய புள்ளிவிவரங்களை இங்கே பார்க்கலாம்.
- மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் மற்றும் அரையிறுதிகள் என இந்த மைதானத்தில் மொத்தம் 11 போட்டிகள் நடைபெற்றுள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்ற போட்டிகள்: 6
- இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகள் வென்ற போட்டிகள்: 5
- போட்டிகள் டை: 0
- கைவிடப்பட்ட போட்டிகள்: 0
- அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் : 102 - முனீபா அலி (பாகிஸ்தான்) vs அயர்லாந்து
- சிறந்த பந்துவீச்சு: 4/18 - நஷ்ரா சந்து (பாகிஸ்தான்) vs அயர்லாந்து
- அணியின் அதிகபட்ச ஸ்கோர்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
- அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன்களில் சுருண்டது.
- வெற்றிகரமான ஹையட்ஸ் ரன் - சேஸ் : பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை துரத்தி வெற்றி பெற்றது.
நியூலேண்ட்ஸ் பிட்ச் அறிக்கை:
கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் பிட்ச் எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாகவே உள்ளது. இங்கு நடந்த இரண்டு அரையிறுதி போட்டிகளிலும் நான்கு அணிகளும் அதிக ரன்கள் குவித்து அசத்தினர். இதையடுத்து, இன்று நடைபெறும் போட்டியும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கு வெற்றி?
ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையில் அலிசா ஹீலி , பெத் மூனி , மெக் லானிங் , கார்ண்டர் மற்றும் எலிஸ் பெர்ரி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஷப்னிம் இஸ்மாயில் , அயபோங்கா காக்கா , மரிசான் கப் மற்றும் நோன்குலுலேகோ மலாபா ஆகியோர் தென்னாப்ரிக்க அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். இந்த தொடரில் இதுவரை முதல் 10 ரன்கள் எடுத்தவர்களில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மூன்று பேரும் , தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இரண்டு பேரும் இடம்பெற்றுள்ளனர். தலா இரண்டு பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் எடுத்த முதல் 10 பேரின் பட்டியலில் உள்ளனர் . இதனால் இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன.
தென்னாப்ரிக்க உத்தேச அணி:
டாஸ்மின் பிரிட்ஸ், லாரா வோல்வார்ட், மரிசான் கேப், சுனே லூஸ் (கேப்டன்), சோலி ட்ரையோன், அன்னேக் போஷ், நாடின் டி க்ளெர்க், சினாலோ ஜாஃப்டா , ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ ம்லபா
ஆஸ்திரேலியா உத்தேச அணி:
அலிசா ஹீலி, பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னர், எலிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேக்ன் ஷட், டார்சி பிரவுன்