மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 


உலகக்கோப்பை இறுதிப்போட்டி:


மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற நிலையில் பிரிவு ஏ,பி என இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதில் ஏ பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. 


அரையிறுதியில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. 


157 ரன்கள் டார்கெட்:


அதன்படி அந்த அணியில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் அலிசா ஹீலே 18 ரன்களிலும், ஆஷ்லே கார்ட்னர் 29 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் மற்றும் மெக் லானிங் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேசமயம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பெத் மூனி சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார்.


இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. பெத் மூனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்தார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில்,  மரிசான் கேப் தலா 2 விக்கெட்டுகளையும், நோன்குலுலேகோ லபா மற்றும் ட்ரையான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 


இதனைத் தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் உலகக்கோப்பையை வெல்லலாம் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது.