மகளிர் டி20 சாலஞ்ச் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று பூனேவில் நடைபெற்றது. மூன்று அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், சூப்பர் நோவாஸ், வெலோசிட்டி ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெலோசிட்டி அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி, சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்தது. 10 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த அந்த அணிக்கு, ஓப்பனர்கள் ப்ரியா பூனியா - டியாண்ட்ரா டோட்டின் ரன் சேர்த்தனர்.
அவர்களை அடுத்து, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 43 ரன்கள் சேர்க்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அடுத்து களமிறங்கிய பேட்டர்கள் சரியாக சோபிக்காததால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய தீப்தி ஷர்மா தலைமையிலான வெலோசிட்டி அணி, ஆரம்பத்திலேயே சறுக்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, நம்பிக்கையை இழந்தது. பார்ப்பவர்களும் சூப்பர் நோவாஸ் அணிதான் வெற்றி பெறும் என்றிருந்த நிலையில், மிடில் ஆர்டர் பேட்டர் லோரா வோல்வார்ட் மற்றும் சிம்ரன் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன்களை விளாசினர். இதனால், கடைசி கட்டத்தில் போட்டி விறுவிறுப்பானது.
குறிப்பாக கடைசி ஓவரில், 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில், ஒரு சிக்சர், 1 ரன், 1 ரன், 2 ரன்கள் என கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் வந்து நின்றது. இந்த தருணத்தில், உலகின் சிறந்த டி20 பந்துவீச்சாளரான சோஃபி சிறப்பாக பந்துவீசவே, வெலோசிட்டி அணிக்கு 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இதனால், 4 ஓவர் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி போட்டியை வென்றது. மகளிர் டி20 சாலஞ்ச் கிரிக்கெட் தொடர் வரலாற்றில், மூன்றாது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி இருக்கிறது இந்த அணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்