கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தொடங்கியது ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர். இந்த தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. இதனிடையே, அரையிறுதி போட்டிக்கு  இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய  அணிகள் தகுதி பெற்றுள்ளன.


இதில் நாளை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதிச் சுற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதேபோல், நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்க அணியுடன் ஆஸ்திரேலிய அணி மோதுகிறது. 


இச்சூழலில், இந்த உலகக் கோப்பை தொடரில் பல்வேறு சாதனைகளை வீரர்கள் படைத்து வருகின்றனர். அதிலும், முக்கியமாக இந்திய அணியின் கிங் கோலி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். மேலும், நாளை நடைபெறும் அரையிறுதிச் சுற்றில் கிரிகெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள்:



கடந்த நவம்பர் 5 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 326 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவர்கள் முடிவில் 83 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. 


இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரன் மிஷின் விராட் கோலி சதம் விளாசினார். அதன்படி, கடைசி வரை களத்தில் நின்ற அவர், 121 பந்துகளில் 10 பவுண்டரிகள் என 101 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் (49) அடித்த வீரர் என்ற கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்தார்.


இச்சூழல் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் கோலி சதம் அடித்தால், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.


உலகக் கோப்பையில் அதிக ரன்கள்:



சர்வதேச ஒரு நாள் உலகக் கோப்பையின் ஒரு தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் தான் இருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 11 இன்னிங்ஸ்கள் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் குவித்தார். 


இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி இதுவரை விளையாடிய 9 இன்னிங்ஸ்களில் 594 ரன்கள் குவித்து இருக்கிறார். நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் அரையிறுதி போட்டியில் 80 ரன்களை விராட் கோலி எடுத்தால், ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.


மேலும், உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் விராட் கோலி முறியடிப்பார். 


முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 5 சதங்கள் ஒரு அரைசதம் உட்பட மொத்தம் 648 ரன்களை குவித்தார்.


உலகக் கோப்பையில் அதிக 50-க்கும் மேற்பட்ட ரன்கள்:


கடந்த நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக முறை 50 ரன்களை (தலா 7)  கடந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசனின் சாதனையை கோலி சமன் செய்தார்.


2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கரின் 7 முறை 50 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை பெற்றார். இந்த சாதனையை 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் ஷாகிப் சமன் செய்தார்.


இச்சூழலில் தான் விராட் கோலி நாளை நடைபெறும் போட்டியில் 50 ரன்களை கடந்தால் இந்த சாதனைகளை முறியடிப்பார். இப்படி விராட் கோலி 3 சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார் மேலும், நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டியிலும் வென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.