கிரிக்கெட் போட்டிகளில் எப்போதும் விறுவிறுப்புக்கும், சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமே இருக்காது. சில பேட்ஸ்மேன்களோ, சில பவுலர்களோ தங்களுக்கு கிடைத்த வாய்ப்பால் ஆட்டத்தையே மாற்றி விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அரங்கேறியுள்ளது.


கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை:


ஆஸ்திரேலியா நாட்டில் கோல்ட் கோஸ்ட்ஸ் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்துள்ளது. இந்த போட்டியில் மட்கிரபா  நேரங் மற்றும் மாவட்ட கிளப் அணியும், சர்பெர்ஸ் பாரடைஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. கடந்த சனிக்கிழமை இந்த இரு அணிகளும் மோதின. முதலில் ஆடிய மட்கீரபா நேரங் அணி எதிரணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.


இதையடுத்து, இலக்கை நோக்கி ஆடிய சர்பெர்ஸ் பாரடைஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்களை எட்டியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு வெறும் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 40வது ஓவரை மட்கிரபா அணி கேப்டன் கேரத் மோர்கனே வீசினார். ஆனால், அந்த ஓவர் ஆட்டத்தையே திசை திருப்பும் என கேரத் மோர்கனே நினைத்திருக்க மாட்டார்.


6 பந்துகளில் 6 விக்கெட்டுகள்:


வெற்றிக்கு வெறும் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் கார்லண்ட் 65 ரன்னில் முதல் பந்திலே அவுட்டானார். அடுத்து வந்த மேத்சன் கேட்ச் முறையில் அவுட்டானார். அடுத்து கேப்டன் கர்டின் வந்தார். அவரும் மோர்கன் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாக மோர்கன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.






ஹாட்ரிக் விக்கெட்டுகள் விழுந்தாலும் வெற்றிக்கு தேவையான 5 ரன்களை கடைசி 3 விக்கெட்டுகள் விழாமல் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில், 4வது பந்திலும்  மோர்கன் விக்கெட் கைப்பற்றினார். அவரது பந்தில் மெக்டாகல் டக் அவுட்டாக, அடுத்து வந்த எக்கெர்ஸ்லி 5வது பந்தில் போல்டானார். இதனால், சர்பெர்ஸ் அணியின் கைவசம் வெறும் 1 விக்கெட் மட்டுமே இருந்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் மோர்கன் கடைசி விக்கெட்டான பேலனையும் போல்டாக்கினார்.


ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியையை வெற்றி பெற வைத்துவிட்டார். இதனால், மட்கிரபா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வெற்றி பெற வேண்டிய போட்டியில் ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து சர்பெர்ஸ் பாரடைஸ் அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய மோர்கன் இந்த போட்டியில் மட்டும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


மேலும் படிக்க:IND Vs NZ Semi Final: வெற்றி? தோல்வி? இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி முடிவை தீர்மானிக்கப்போகும் 10 ஓவர்கள்: வான்கடே மைதானத்தின் மேஜிக் என்ன?


மேலும் படிக்க: IND Vs NZ knock Out: இந்தியாவை ரவுண்டு கட்டி அடிக்கும் நியூசிலாந்து..! நாக்-அவுட் சுற்று தொடர் தோல்விகளுக்கு பழி தீர்க்குமா?