ஆஸ்கர் விருது வென்ற ”நாட்டு நாட்டு” பாடலுக்கு மும்பை வான்கடே மைதானத்தில், இந்திய வீரர் கோலி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


ஆஸ்கர் விருது வென்ற ”நாட்டு நாட்டு” பாடல்:


ராஜமவுளி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற படம் ஆர்ஆர்ஆர். வசூலில் பட்டையை கிளப்பியதோடு இந்த படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, சமூக வலைதளங்களிலும் வைரலானது. உச்சபட்ச கவுரமாக இந்த பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதும் கிடைத்தது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றனர். இது ஆர்ஆர்ஆர் படத்திற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.






நடனமாடிய கோலி:


இந்நிலையில் தான், மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அப்போது,  இந்திய அணி பீல்டிங் செய்தபோது விராட் கோலி, 'நாட்டு நாட்டு' பாடலின் நடன அசைவுகளை போட்டிருந்தார். ஸ்லிப் ஃபீல்டராக அவர் நின்றபோது இந்தப் பாடலுக்கு நடனமாடி இருந்தார். குறிப்பாக நாட்டு நாட்டு பாடலின் ஐகானிக் அசைவுகளான ஒற்றை காலில் ஆடும் நடன அசைவுகளை அவர் செய்து இருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. இதனிடையே, கோலியின் பையோபிக்கில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக, ஆர்ஆர்ஆர் படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம்சரண் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


ஒருநாள் தொடர்:


இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 75 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜா 45 ரன்களும், கேப்டன் பாண்டியா 25 ரன்களும் எடுத்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும், ராகுல் மற்றும் ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து,, இந்த தொடரின் இரண்டாவது போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.