அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பேட் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர்கள் யாருமே அரைசதம் அடிக்காவிட்டாலும் ஓரளவு ரன்களை சேர்த்தனர். தென்னாப்பிரிக்க அணி 247 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இழந்திருந்தது.
சேனுரன் முத்துசாமி சதம்:
தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்த சேனுரான் முத்துசாமி - கைல் வெரைய்ன் 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். டெயிலண்டர்களை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று கருதிய இந்திய பந்துவீச்சிற்கு இந்த ஜோடி கடும் சவால் அளித்தது. நேற்று 25 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்த முத்துசாமி அரைசதம் விளாசினார். அவருக்கு வெரெய்ன் நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.
களத்தில் நங்கூரமிட்டு அரைசதம் நோக்கி வெரெய்ன் நகர்ந்த நிலையில் ஜடேஜா சுழலில் அவர் 45 ரன்களில் அவுட்டானார். தென்னாப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்ததால் அவருக்கு அடுத்து வந்த ஜான்சென் அதிரடியாக ஆடினார். இதனால், தென்னாப்பிரிக்க அணி 400 ரன்களை கடந்தது. மறுமுனையில் அபாரமாக ஆடிய தமிழர் சேனுரான் முத்துசாமி சதம் விளாசினார்.
யார் இந்த முத்துசாமி?
சேனுரான் முத்துசாமிக்கு இதுவே முதல் டெஸ்ட் சதம் ஆகும். தென்னாப்பிரிக்க அணிக்காக இவர் களமிறங்கினானாலும் இவரது பூர்வீகம் தமிழ்நாடே ஆகும். இவரது நெருங்கிய உறவினர்கள் நாகப்பட்டினத்தில் வசித்து வருகின்றனர். இவரது குடும்பத்தினர் தென்னாப்பிரிக்காவிற்கு புலம்பெயர்ந்து விட்டனர்.
முத்துசாமி அந்த நாட்டில் உள்ள கிளிஃப்டன் கல்லூரியில் படித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்காக 2019ம் ஆண்டு முதல் ஆடி வருகிறார். இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 388 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 1 சதம், 2 அரைசதம் அடங்கும். சுழற்பந்துவீச்சாளர் என்ற அடிப்படையிலே இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவர் இதுவரை ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளும், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளும், டி20-யில் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். பும்ரா, சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ் போன்ற வலுவான பந்துவீச்சாளர்களை எதிர்த்து இந்த சதத்தை முத்துசாமி விளாசியுள்ளார். அவருக்கு வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அசத்தல் ஆல்ரவுண்டர்:
சிறப்பாக ஆடிய சேனுரன் முத்துசாமி சிராஜ் பந்துவீச்சில் அவுட்டானார். அவர் 206 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 109 ரன்கள் எடுத்து அவுட்டானார். 7வது விக்கெட்டிற்கு களமிறங்கிய அசத்தலான இன்னிங்ஸ் ஆடி தென்னாப்பிரிக்கா அணி 400 ரன்களை கடக்க மிகப்பெரிய பக்கபலமாக முத்துசாமி இருந்தார்.
31 வயதான முத்துசாமி தென்னாப்பிரிக்க அணியில் இனி நிரந்தரமான இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் ஆல் ரவுண்டராக ஏற்கனவே ஜொலித்து வரும் நிலையில், முத்துசாமி கூடுதல் ஆல்ரவுண்டராக தென்னாப்பிரிக்க அணிக்க பக்கபலமாக மாறியுள்ளார்.