IND Vs SA ODI: தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
இந்தியா - தென்னாப்ரிக்கா ஒருநாள் தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்கா அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து வரும் 30ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்க உள்ளது. ஆனால், முதல் டெஸ்ட் போட்டியின் போது கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் கில் தற்போது ஓய்வில் உள்ளார். அடுத்த சில வாரங்களுக்கு அவருக்கு ஓய்வு தேவை என கூறப்படுகிறது. இதனால், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் குழப்பம் நிலவுவதாக தெரிகிறது.
3 முக்கிய வீரர்கள் விலகல்:
கேப்டன் கில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்ரிக்கா தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த, மற்றொரு நட்சத்திர வீரரான ஸ்ரேயஸ் அய்யர் தற்போது தான் மீண்டு வர தொடங்கியுள்ளார். அடுத்த 2-3 மாதங்களுக்கு அவர் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா காயத்திலிருந்து தற்போது தான் மீண்டு வந்துகொண்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு முழு உடற்தகுதி பெறும் நோக்கில், தென்னாப்ரிக்கா தொடரிலிருந்து விலக அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 மாற்று வீரர்கள் யார்?
கில், ஸ்ரேயாஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா போன்ற முக்கிய வீரர்களின் இடத்தை நிரப்ப, யாரை பரிசீலிக்கலாம் என பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. குறிப்பாக கேப்டன் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கலாம் என, ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் அக்சர் படேலின் பெயர்கள் விவாதிக்கப்பட்டு வருகிறதாம். கே.எல். ராகுல் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தொடர்ந்து ஒடிஐ போட்டிகளில் விளையாடி வருவதால், அவர்களுக்கு பொறுப்பு வழங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ரிஷப் பண்ட் கம்பேக்?
தற்போதைய சூழலில் ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்டிற்கான இடம் என்பது நிரந்தரமானதாக இல்லை. அதேநேரம், தென்னாப்ரிக்காவில் உள்ள வலது கை பந்துவீச்சாளர்களை சமாளிக்க ஏதுவாக, வலுவான ப்ளேயிங் லெவனை கட்டமைக்க பண்டை அணியில் கொண்டு வர பிசிசிஐ ஆலோசித்து வருகிறதாம். கில் இல்லாத நிலையில், யஷஷ்வி ஜெய்ஷ்வால் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறங்கலாம் என கருதப்படுகிறது. ஸ்ரேயாஸ் அய்யரின் இடத்திற்கு 4வது வீரராக பண்ட் அல்லது திலக் வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
பவுலிங் யூனிட்டில் யாருக்கு வாய்ப்பு?
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரிவில் ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஆகாஷ் தீப் ஒரு மாற்று வீரராக தேர்வு செய்யப்படலாம். தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு, தென்னாப்ரிக்கா தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம்.