இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டேவான
இன்று தொடங்கவிருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் என்னவாக இருக்கும்? ரஹானே அணியில் இருப்பாரா? இல்லையெனில் அவருக்கு பதில் யார்? என்பது போன்றவையே ரசிகர்களின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.


தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனான கே.எல்.ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது இந்திய அணி 5 பௌலர்களோடு இறங்குவதையே விரும்புவதாக தெரிவித்திருந்தார். 5 பௌலர்கள் எனில் ஒரு ஸ்பின்னராக அஷ்வின் இருக்கக்கூடும். மீதமுள்ள 4 இடங்களில் பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூர், சிராஜ் இறங்கக்கூடும். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை உமேஷ் யாதவ் அல்லது இஷாந்த் சர்மா இருவரில் ஒருவரை உள்ளே கொண்டு வருவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படலாம். அந்த சமயத்தில் ஷர்துல் தாகூர் அல்லது சிராஜ் இருவரில் ஒருவர் பென்ச்சில் வைக்கப்படுவர். இதைத்தாண்டி பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுப்பதில் பெரிய குழப்பம் இருக்கப்போவதில்லை.


பேட்டிங் என்று வரும்போது 6 பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுக்க வேண்டும். கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் ஓப்பனர்களாக இறங்குவார்கள். நம்பர் 3, 4 இல் புஜாராவும் கோலியும் இறங்குவார்கள். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் இறங்கக்கூடும். ஆக, 5 பேட்ஸ்மேன்களுக்கான தேர்வில் எந்த குழப்பமும் இல்லை. இன்னும் ஒரே ஒரு இடம் அதுமட்டும்தான் பிரச்சனை. அந்த நம்பர் '5' இடத்தில் இறங்கப்போவது யார்?




சில மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் இந்த கேள்விக்கு சந்தேகமேயின்றி ரஹானே என பதிலளித்திருக்கலாம். ஆனால், இப்போது அப்படி கூற முடியாது. காரணம் ரஹானேவின் மோசமான ஃபார்ம். கொரோனா லாக்டவுணுக்கு பிறகு புத்தியல்பு சூழலில் கிரிக்கெட் தொடங்கிய பிறகு, கடைசியாக கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ரஹானே சதமடித்திருந்தார். அந்த போட்டியில் 112 ரன்களை அடித்திருந்தார்.




அந்த போட்டியை இந்தியா வெல்ல மிக முக்கிய காரணமாக அமைந்தார். ஆனால், அதன்பிறகு பெரிதாக எங்கேயும் சோபிக்கவே இல்லை. அந்த ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு இங்கிலாந்துக்கெதிரான உள்ளூர் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்துக்கெதிரான வெளிநாட்டு தொடர் என எல்லாவற்றிலுமே சொதப்பியிருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் புஜாராவுடன் இணைந்து ஒரு இரண்டு செஷனுக்கு விக்கெட்டே விடாமல் ரஹானே நின்றிருப்பார். அது ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஆட்டமாக அமைந்திருந்தது. இதைத்தாண்டிய ரஹானே தாக்கம் ஏற்படுத்திய இன்னிங்ஸ் என்று எதையுமே குறிப்பிட முடியாது. எல்லாவற்றிலும் சொதப்பலே. சமீபத்தில் நடந்து முடிந்த நியுசிலாந்துக்கெதிரான தொடரின் முதல் போட்டியில் ரஹானேதான் கேப்டனாக இருந்தார். அந்த போட்டியிலும் பெரிதாக சோபிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் 29 இன்னிங்ஸ்களில் ஆடி 683 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 24.4 மட்டுமே. நியுசிலாந்து தொடரின் இரண்டாவது போட்டியில் கோலி மீண்டும் அணிக்கு திரும்பி கேப்டனாகியிருந்தார். அந்த போட்டியில் காயம் என வழக்கமான சப்பை கட்டை கட்டி ரஹானேவை கோலி பென்ச்சில் வைத்திருப்பார்.


இந்நிலையில்தான் தென்னாப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரஹானே இடம்பெற்றிருந்தாலும் அவரின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருந்தது. அணியிலேயே தனக்கான இடத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் வீரருக்கு துணை கேப்டன் பதவியை எப்படி கொடுக்க முடியும்?




ரஹானே சொதப்பிக் கொண்டிருந்த இந்த சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் டெஸ்ட்டிலேயே சதம் மற்றும் அரைசதத்தை அடித்து அசத்தியிருந்தார். இந்திய A அணியோடு தென்னாப்பிரிக்கா சென்றிருந்த ஹனுமா விஹாரி அங்கே மூன்று அரைசதங்களை அடித்திருக்கிறார். இவர்கள் இருவருமே தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஆடப்போகும் இந்திய அணியிலும் இருக்கிறார்கள். இதனால்தான் ரஹானேவின் இடம் கேள்விக்குறியாகியிருக்கிறது. ரஹானேவிற்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ஹனுமா விஹாரி நம்பர் '5' யில் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


2018 இல் இந்திய அணி தென்னாப்பிரிக்கவிற்கு சுற்றுப்பயணம் செய்த போதும் இரண்டு போட்டிகளில் ரஹானே டிராப் செய்யப்பட்டிருந்தார். அந்த சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியிருக்கிறது. 2018 இல் ரஹானே நீக்கப்பட்டது ஒரு தற்காலிகமான விஷயமாக கடந்து போய்விட்டது. ஆனால், இப்போது ரஹானே ப்ளேயிங் லெவனிலிருந்து வெளியேற்றப்பட்டு பென்ச்சில் வைக்கப்பட்டால் அது நிரந்தர நீக்கமாக அமையவும் வாய்ப்பிருக்கிறது.


ஆனால், ரஹானேவை அப்படி நிரந்தரமாக நீக்கும் எண்ணம் இருந்திருந்தால் அவரை அணியில் தேர்ந்தெடுத்திருக்கவே மாட்டார்கள். ரஹானேவிற்கு ஒரு கடைசி வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே கோலி-டிராவிட் கூட்டணியின் எண்ணமாக இருக்கும். அந்த கடைசி வாய்ப்பு நாளை நடைபெறும் சென்ச்சூரியன் பாக்ஸிங் டெஸ்ட்டிலேயே வழங்கப்படலாம். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் கடந்த பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மெல்பர்னில் என்ன செய்தாரோ அதை சென்ச்சூரியனிலும் செய்தாக வேண்டும். அணிக்காக இல்லாவிட்டாலும் அவருக்காக கட்டாயம் செய்தே ஆக வேண்டும்.