இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றதுஇந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில்  இன்று பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில்  உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.


 


அறிமுக வீரராக களம் இறங்கிய ஆகாஷ் தீப்:


இந்த போட்டின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் உலகில் அறிமுகமாகியிருக்கிறார் 27 வயதே ஆனா இளம் வீரர் ஆகாஷ் தீப்.  தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இவரை பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வருகின்றனர். அதேநேரம் இவருக்கு இந்த வாய்ப்பு ஒன்று எளிதாக கிடைத்துவிடவில்லை.


 






கிரிக்கெட் மீதான காதல்:


பிகாரில் உள்ள சசாரம் பகுதி தான் ஆகாஷ் தீப்பின் சொந்த ஊர். சிறுவயது முதலே கிரிக்கெட்டின் மீதான இவரது காதல் மிக நீளமானது. பேட் மற்றும் பந்தை தொட்டாலே அடிக்கும் தந்தை ஆனாலும் தீராத கிரிக்கெட் கனா. ஆதரிக்க யாரும் இல்லை என்ன செய்வது என்று தெரியமல் தவித்தார் ஆகாஷ். இப்படியான சூழலில் தான் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள துர்காபூருக்குச் சென்றார். அங்கு வேலை தேடிச் சென்ற இவருக்கு அடைக்கலம் அளித்தார் இவரது மாமனார் ஒருவர்.


நெஞ்சில் விழுந்த பேரிடி:


பின்னர் அங்கு உள்ள உள்ளூர் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை தொடர்ந்தார். அங்கு இவர் வீசிய வேகப்பந்து வீச்சு அனைவரின் பார்வையையும் தன் பக்கம் இழத்தது. தன்னுடைய திறமையை பட்டை தீட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இவரது நெஞ்சில் திடீரென ஒரு பேரிடி விழுந்தது. தன்னுடைய தந்தையை இழந்தார். பேட் மற்றும் பந்தை தொடாதே என்று எண்ணற்ற முறை தந்தையிடம் அடி வாங்கியிருந்தாலும் தன் குடும்பத்தினருக்கு ஒரே ஆறுதலாக இருந்த தந்தையின் மரணம் இவரை வெகுவாக தாக்கியது. பக்கவாதத்தின் மூலம் தந்தை இழந்த சோகத்தில் குடும்பமே மூழ்கி இருந்த இரண்டே மாதத்தில் தன்னுடைய மூத்த சகோதரரையும் இழந்தார் ஆகாஷ் தீப்.


கனவா? குடும்பமா?


அடுத்தடுத்த இழப்புகள் குடும்பத்தை இனி யார் நடத்துவது என்ற கேள்விகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கே உரித்தான தீராக்கனா மறுபக்கம். செய்வதறியாமல் திகைத்த ஆகாஷ் கடைசியாக எல்லா இளைஞர்களும் எடுக்கும் அதே முடிவை எடுத்தார். கனவா? குடும்பமா? என்ற கேள்விக்கு குடும்பம் தான் என்ற பதிலை தன் முடிவாக எடுத்தார். கிரிக்கெட் மீதான கனவை ஓரங்கட்டினார். மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிட்டு தன் தாய் மற்றும் குடும்பத்திற்காக கிடைத்த வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். இடையிடையே கிரிகெட் கனவு வந்து போக மீண்டும் துர்காபூருக்குத் திரும்பினார். கொல்கத்தாவிற்கு சென்றார். அங்கு தனது உறவினர் ஒருவருடன் தனியாக அறையெடுத்து தங்கினார்.


இந்திய அணியில் இடம்:


அப்போது தான் 23 வயதிற்குட்பட்ட பெங்கால் அணியில் சேர்ந்தார். பின்னர்2019 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் விளையாடினார்.  இடையே பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடியதால் 2022 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பிடித்தார். கடுமையாகன உழைப்பின் மூலம் தான் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 313 வது வீரராக அறிமுகம் ஆகி இருக்கிறார் ஆகாஷ் தீப். அதன்படி, தன்னுடைய முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கும் ஆகாஷ் தீப் இந்திய கிரிக்கெட்டில் இன்னும் பல உயரங்கள் தொட நாமும் வாழ்த்துவோம்.