Cricketers Retired 2023: நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல முன்னணி நட்சத்திர வீரர்களும் ஓய்வு பெற்று இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


சர்வதேச கிரிக்கெட்:


உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. இதில் புகழ்பெற்று விளங்கும் வீரர்களை ரசிகர்கள் தங்களது முன்மாதிரியாக கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், நாம் மைதானத்தில் பார்த்து ரசித்து கொண்டாடும் வீரர்கள் ஓய்வு பெறுவது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் நடப்பாண்டிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் யார்? யார்? என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. 


ஸ்டூவர்ட் பிராட்:


இங்கிலாந்தின் மிகுந்த அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் பிராட்,  லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் கடைசி டெஸ்டின் 3வது நாளில் தனது ஓய்வை அறிவித்தார். ஸ்டூவர்ட் பிராட் 167 போட்டிகளில் 27.68 சராசரி மற்றும் 2.97 எகானமியுடன் 604 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதன்படி,  சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். 37 வயதான அவர் தனது கடைசி ஆட்டத்தில், எதிரணியின் கடைசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.


அலெக்ஸ் ஹேல்ஸ்:


இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் 2022 டி20 உலகக் கோப்பையின் ஃபைனலில்,  கடைசியாக தனது அணிக்காக விளையாடினார்.  பின்னர் ஆகஸ்ட் 2023 இல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 34 வயதான அவர் 11 டெஸ்ட், 70 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டிகளில் தனது நாட்டுக்காக களமிறங்கியுள்ளார். டி20 உலகக் கோப்பை 2022-ஐ இங்கிலாந்து வென்றதில்,  ஹேல்ஸ் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவிற்கு எதிரான அரையிறுதியில்  86* (47) ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


சுனில் நரைன்:


மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனும் நடப்பாண்டுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். டி20யில் மெய்டன் சூப்பர் ஓவரை வீசிய தனிச் சாதனையை நரைன் படைத்துள்ளார். நரேன் மேற்கிந்தியத் தீவுகளின் 2012 டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் ஒரு பகுதியாக இருந்தார். ஐபிஎல் தொடரிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.


குயின்டன் டி காக்:


தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனான டி காக் 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குயின்டன் டி காக் தனது கடைசி ODI உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் 594 ரன்கள் எடுத்ததன் மூலம், தொடரில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார். மொத்தமாக டி காக் 155 இன்னிங்ஸ்களில் 45.74 சராசரியில் 21 சதங்களுடன் 6770 ரன்களை சேர்த்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் இனி சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.


ஆரோன் பிஞ்ச்:


ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பிஞ்சும் நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.   ஐந்து டெஸ்ட், 146 ODI மற்றும் 103 T20I என மொத்தம் 254 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 17 ODI சதங்கள் மற்றும் இரண்டு T20I சதங்கள் உட்பட 8,804 ரன்களைக் குவித்தார்.


மெக் லானிங்:


புகழ்பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் கேப்டன் மெக் லானிங்கும் நவம்பர் 2023 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். லானிங் தனது ஒன்பது ஆண்டுகால கேப்டன் பதவியில் நான்கு டி20 உலகக் கோப்பைகள் மற்றும் ஒரு ஒருநாள் உலகக் கோப்பை உட்பட ஐந்து ஐசிசி பட்டங்களை ஆஸ்திரேலியாவிற்காக வென்றுள்ளார்.  தனது சர்வதேச வாழ்க்கையில் 241 போட்டிகளில் 8,352 ரன்கள் எடுத்துள்ளார்.


மேற்குறிப்பிட்டவர்கள் மட்டுமின்றி இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், இமாத் வசிம் ஆகியோரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.