இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து 105 ரன்களை எடுத்திருந்தார்.


இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்கு அறிமுகமாகியிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரைக்கும் இந்திய அணிக்காக அவர் ஆடும் முதல் போட்டி இதுவே. இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து அசத்தியிருக்கிறார்.


இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடிக்கும் 16 வது இந்திய வீரர் எனும் பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றிருக்கிறார். முதல் முறையாக 1933 இல் லாலா அமர்நாத் இந்த சாதனையை செய்திருந்தார். அதன்பிறகு சோதன், க்ரிபால் சிங், அப்பாஸ் அலி, ஹனுமந்த் சிங், குண்டப்பா விஸ்வநாத், சுரீந்தர் அமர்நாத்,  அசாரூதின், ப்ரவீன் அம்ரே, கங்குலி, சேவாக், ரெய்னா, தவான், ரோஹித், ப்ரித்வி ஷா ஆகியோர் தங்களது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்திருந்தனர். இப்போது, ஸ்ரேயாஸ் ஐயரும் அப்படி ஒரு சாதனையை செய்திருக்கிறார்.


1996 இல் கங்குலி தனது முதல் போட்டியில் அடித்த சதம் ரொம்பவே சிறப்பானது. எல்லா வீரர்களுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது கனவாக இருக்கும். அதுவும் இங்கிலாந்தின் லார்ட்ஸில் ஒரு போட்டியையாவது ஆடி விட வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும். ஆனால், கங்குலிக்கு இதெல்லாம் தனது கரியரின் தொடக்கத்திலேயே கிடைத்தது. லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் கங்குலி இந்திய அணிக்கு அறிமுகமே ஆகியிருந்தார். அந்த அறிமுக டெஸ்ட்டிலேயே சதமடித்து லார்ட்ஸின் ஹானர்ஸ் போர்டிலும் தனது பெயரை பதித்தார். அந்த போட்டியில் ட்ராவிட்டும் கங்குலியும் அமைத்த கூட்டணி இப்போது வரை ரசிகர்களின் ஃபேவ்ரட் லிஸ்ட்டில் டாப்பில் இருக்கிறது.


2001 இல் சேவாக் அடித்த சதமும் ஒரு விதத்தில் சிறப்பானதே. அதிரடி ஓப்பனராக அறியப்பட்ட சேவாக், தொடக்கத்தில் மிடில் ஆர்டரிலேயே இறங்கி வந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கவிற்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் வைத்தே நம்பர் 6 இல் இறங்கி சதமடித்திருப்பார்.


அடுத்ததாக கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து 2010 இல் சுரேஷ் ரெய்னா தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்திருப்பார். இந்த போட்டி இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை 600+ ரன்களை அடித்துவிடும். இக்கட்டான சூழலில் சச்சின் டெண்டுல்கருடன் நின்று பெரிய பார்ட்னர்ஷிப் போட்டு ரெய்னா அணியை சரிவிலிருந்து மீட்டிருப்பார்.


கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சிறந்த ஓப்பனர்களான ரோஹித் மற்றும் தவான் இருவரும் 2013 ஆம் ஆண்டில் தங்களது அறிமுக போட்டியிலேயே சதமடித்தனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 85 பந்துகளில் தவான் சதமடித்திருப்பார். அறிமுக போட்டியில் சதமடித்தவர்கள் பட்டியலில் மிகக்குறைந்த பந்துகளில் சதமடித்தவர் எனும் கூடுதல் பெருமையையும் தவான் பெற்றார்.


2018 இல் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான போட்டியில் அறிமுகமான இளம் வீரரான ப்ரித்திவி ஷா சதமடித்திருப்பார். இவர் ஆடிய விதத்தை பார்த்து கவாஸ்கர் + அசாரூதின் + சச்சின் மூன்று பேரும் கலந்த கலவையாக ப்ர்திதிவி ஷா இருக்கிறார் என பலரும் புகழ்ந்தார்கள்.


இப்போது இந்த வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரும் இணைந்திருக்கிறார். ரோஹித், கோலி, கே.எல்.ராகுல் போன்ற முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையில், இக்கட்டான சூழலில் நின்று நிதானமாக ஆடி மிகச்சிறப்பான சதத்தை ஸ்ரேயாஸ் ஐயர் அடித்திருக்கிறார். ஜடேஜாவுடன் இவர் அமைத்த கூட்டணியே இந்திய அணி 300+ ரன்களை அடிப்பதற்கு காரணமாக அமைந்தது. கோலி, ரோஹித், ராகுல் ஆகியோர் அடுத்தப்போட்டியில் அணிக்குள் வந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கான இடம் கேள்விக்குறியாகாத வகையிலான இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். இனி பிரச்சனையெல்லாம் ரஹானேக்குதான்!