Kohli Rohit ODI: உடல் மற்றும் போட்டி திறனை தக்கவைத்துக் கொள்ள, கோலி மற்றும் ரோகித் சர்மா நடப்பாண்டு விஜய் ஹசாரே கோப்பையில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோலி, ரோகித்தை கொண்டாடும் ரசிகர்கள்..
அண்மையில் முடிவுற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். இதனால், சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் எப்போது அவர்கள் அணியில் இணைவார்கள் என்ற கேள்வி நிலவுகிறது.இந்நிலையில், இனி அடுத்த ஆண்டு தான் சர்வதேச போட்டிகளில் களமிறங்க உள்ளனர் என்பது பதிலாகும்.
விராட், ரோகித் கம்பேக் எப்போது?
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் கம்பேக் ஆனது, ஜனவரி 11, 2026 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது இந்தியா நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த ஆண்டு இந்தியா பங்கேற்கும் முதல் 50 ஓவர் தொடராகும். மேலும் அடுத்த ஐசிசி ஒருநாள் கோப்பைக்கு தயாராவதற்கான காலகட்டமாகவும் பார்க்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் இந்தியா தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பதால், கோலி மற்றும் ரோகித் ஆகிய இரண்டு ஜாம்பவான்களின் இருப்பு அணியில் மிக முக்கியமானதாக இருக்கும்.
திருவிழாவாகும் விஜய் ஹசாரே கோப்பை
சர்வதேச தொடருக்காக இந்திய அணியில் இணைவதற்கு முன்பு, கோலி மற்றும் ரோகித் ஆகிய இருவரும் இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு 50 ஓவர் போட்டியான விஜய் ஹசாரே கோப்பையில் (VHT) பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 24, 2025 அன்று தொடங்கும் இந்த உள்நாட்டு போட்டி, போட்டிக்கான உடற்தகுதி மற்றும் ஃபார்மை தக்கவைக்க அவர்களுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பும் விராட் கோலி தனது சொந்த அணியான டெல்லி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார். இதேபோல், ரோகித் சர்மா தனது மாநில அணிக்காக களமாட உள்ளார். அவர்களின் பங்கேற்பு, மிகவும் அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்கள் உடன் சேர்ந்து தங்கள் திறமைகளை கூர்மைப்படுத்தவும், இளைஞ்சர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கவும் ஒரு தளமாகவும் விஜய் ஹசாரே கோப்பை உருவெடுப்பதை காட்டுகிறது.
நியூசிலாந்து ஒருநாள் தொடர்:
இந்தியாவுக்காக இந்த துடிப்பான ஜோடி மீண்டும் களமிறங்குவதைக் காண ரசிகர்கள் ஜனவரி இரண்டாவது வாரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதன்படி, முதல் போட்டி ஜனவரி 11ம் தேதி வதோத்ராவிலும், இரண்டாவது போட்டி 14ம் தேதி ராஜ்கோட்டிலும் மற்றும் மூன்றாவது போட்டி 18ம் தேதி இந்தூரிலும் நடைபெற உள்ளது.