இந்திய சுழல் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமாகிய பிஷன்சிங் பேடி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் கடந்த 2 ஆண்டுகளாக அவதிப்பட்ட வந்த அவர் இன்று காலமானார். கேப்டன்களிலே ஆக்ரோஷமான கேப்டன்கள் யார் என்றால்? 2 கே கிட்ஸ்களுக்கு விராட் கோலி, 90ஸ் கிட்ஸ்களுக்கு கங்குலி என்று தெரியும். ஆனால், பிஷன்சிங் பேடி அப்போதே மிகவும் ஆக்ரோஷமான கேப்டனாக திகழ்ந்துள்ளார்.


1978-ல் நடந்த அந்த சம்பவம்:


1978ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த அந்த ஒருநாள் போட்டியே அதற்கு சிறந்த உதாரணம் ஆகும். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் சென்றது. 1978ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி கடைசி ஒருநாள் போட்டியில் ஆடியது. இரு அணிகளும் தலா 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக களமிறங்கின.


முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 205 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஆசிப் இக்பால் 62 ரன்கள் விளாசினார். இந்திய அணியின் கபில்தேவ், வெங்கட்ராகவன், அமர்நாத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 206 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில், 37 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 183 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் அன்ஷ்மான் கெய்க்வாட் 78 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் ஆடிக் கொண்டிருந்தார்.


தொடர் பவுன்சர்கள்:


எஞ்சியிருந்த 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து, அந்த அணியில் இம்ரான்கானுக்கு 1 ஓவரும், சர்ப்ராசுக்கு 2 ஓவர்களும் கையில் இருந்தது. அப்போது, இந்திய அணியினருக்கு எதிராக சர்ப்ராஸ் பவுண்சரை அஸ்திரமாக பயன்படுத்தினார். அந்த போட்டியின்போது பாகிஸ்தானைச் சேர்ந்தவரே நடுவராக இருந்தார்.


அப்போது, முதல் பந்தை அவர் பவுன்சராக வீசினார். ஆனால், அம்பயர் எச்சரிக்கவில்லை. அடுத்த பந்தையும் அவர் அதேபோல வீசினார். அதற்கும் அம்பயர் எதுவும் சொல்லவும் இல்லை. ஒயிடும் அளிக்கவில்லை. மூன்றாவது பந்தும் அதேபோல வீசப்பட்டது. அப்போதும், அம்பயர் எதுவுமே சொல்லவில்லை. 4வது பந்தும் மிகவும் பவுன்சராக வீசப்பட்டது. அதாவது, 6 அடி உயரம் கொண்ட கெய்க்வாட்டிற்கே அந்த பந்து பவுன்சராக சென்றது.


திரும்ப வரச்சொன்ன பிஷன்சிங் பேடி:


கிரிக்கெட் விதிகளின்படி, அவ்வாறு வீசப்படும்போது ஒயிட் அல்லது நோ பால் அளிக்கப்பட வேண்டும். ஆனால், தன்னுடைய சொந்த நாடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக களத்தில் இருந்த அம்பயர் ஒயிடு தர மறுத்ததை கண்ட அப்போதைய கேப்டன் பிஷன்சிங் பேடி ஆவேசம் அடைந்தார். இதையடுத்து, இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை திரும்ப வருமாறு அழைத்தார். மேலும், இதற்கு மேல் இந்திய அணியினர் ஆட மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். மேலும், இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துவிடுங்கள் என்றும் ஆதங்கமாக கூறிவிட்டார். ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் கேப்டன் ஒருவர் இதற்கு மேல் ஆட மாட்டோம் எதிரணி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துவிடுங்கள் என்று கூறியது இதுவே முதல்முறை ஆகும்.


பிஷன்சிங் பேடியின் இந்த முடிவிற்கு பலரும் விமர்சனங்களை தெரிவித்தாலும், ரசிகர்கள் பலரும் பிஷன்சிங் பேடியை பாராட்டவே செய்தனர். இந்த போட்டிக்கு பிறகு கிரிக்கெட் ஆடும் அணிகளைச் சேர்ந்தவர்கள் நடுவர்களாக களமிறக்கப்படுவதை ஐ.சி.சி. நிறுத்திக் கொண்டது. ஜாம்பவான் கேப்டன்களான கபில்தேவ், கவாஸ்கருக்கே பிஷன்சிங் பேடி கேப்டனாக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அந்த போட்டிக்கு நடுவர்களாக ஜாவித் அக்தர் – கைசர் ஹையாத் இருந்தனர். பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற போட்டியிலே பாகிஸ்தான் நடுவர்களின் செயலலைக் கண்டித்து இந்திய கேப்டனின் தைரியமான முடிவு அப்போது உலக கிரிக்கெட் அரங்கை திரும்பி பார்க்க வைத்தது.