SL Cricket Board: இலங்கை கிரிக்கெட் வாரியம் முழுமையாக கலைக்கப்பட்டதன் பின்னணி என்ன?, அடுத்து என்ன மாற்றம் அதில் நிகழ உள்ளது என்பன தொடர்பான பல கேள்விகள் எழுந்துள்ளன.


உலகக் கோப்பை கிரிக்கெட்:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கிரிக்கெட் கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி, இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்ற நிலையில், அதில் 5 அணிகள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவையாகும். கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெற்றபோது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை என மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதேபோன்று நடப்பு உலகக் கோப்பையிலும் ஆசிய அணிகள் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. 


சொதப்பிய இலங்கை:


ஆனால், நடப்பு உலகக் கோப்பையில் இந்தியாவை தவிர மற்ற ஆசிய அணிகள் அனைத்தும் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தின. குறிப்பாக முன்னாள் உலக சாம்பியனான இலங்கை அணி ஆரம்பம் முதல் மோசமாக விளையாடி வருகிறது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தற்போது வரை 7 லீக் போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. உலகக் கோப்பை தொடரிலிருந்து பெரும்பாலும் வெளியேறிவிட்ட நிலையில், 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறுமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. 


இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு:


அண்மைகால தொடர்கள், ஆசிய கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையிலும் இலங்கை அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. இதுபோன்ற சர்வதேச தொடர்களுக்கு ஒரு அணியாக தயாராவது, செயல்படுவது மற்றும் திட்டமிடுதல் தொடர்பாக இலங்கை மீது பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் தான் இலங்கை கிரிக்கெட் வாரியம் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது. இடைக்கால தலைவராக அந்த அணியின் முன்னாள் கேப்டனான  அர்ஜுன் ரணதுங்கா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.


அடுத்து என்ன?


கடந்த 2008ம் ஆண்டு இலங்கை அணி மோசமாக செயல்பட்ட காலத்திலும், அந்த கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டு அர்ஜுன் ரணதுங்கா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை கிரிக்கெட் வாரியம் மாற்றியமைக்கப்பட்டது. அதன் பிறகு இலங்கை அணியின் செயல்பாடும் சிறப்பாக இருந்தது. 2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதிபோட்டி வரையிலும் முன்னேறியது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியம் மீண்டும் கலைக்கப்பட்டு, அர்ஜுன் ரணதுங்கா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழு, கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக செயல்படுவதை உறுதி செய்வதோடு, அணியில் உள்ள பிரச்னைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கும் என கூறப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அனுபவமின்றி தவிக்கும் இலங்கை:


இலங்கை அணியில் கண்கூடாகவே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதில் முதலாவது அனுபவம் வாய்ந்த வீரர்கள் யாருமே அணியில் இல்லாதது தான். ஜெயவர்தனே, சங்ககாரா, மலிங்கா மற்றும் முத்தையா முரளிதரன் என பல உலகத் தரம் வாய்ந்த வீரர்களை இலங்கை அணி கிரிக்கெட்டிற்கு வழங்கியுள்ளது. ஆனால், தற்போது அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்களின் பெயர்கள் கூட ரசிகர்களின் மனதில் பதியவில்லை. நடப்பு உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இலங்கை அணியில், 11 பேர் முதன் முறையாக உலகக் கோப்பையில் களமிறங்குபவர்கள் ஆவர். சண்டிமல் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால், இக்காட்டான நேரத்தில் வழிகாட்டுவதற்கான அனுபவம் வாய்ந்த வீரர்கள் யாரும் இன்றி இலங்கை அணி தள்ளாடி வருகிறது.


மற்ற பிரச்னைகள் என்ன?


நட்சத்திர வீரர்களின் காயமும் இலங்கை அணியின் பெரும் பிரச்னையாக உள்ளது. ஹசரங்கா, கேப்டன் தசுன் ஷனகா ஆகியோர் காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விலகியதும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இலங்கையில் உள்ள தமிழ் வீரர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது போன்ற, அரசியல் காரணங்களும் இலங்கை அணியை வலுவாக கட்டமைப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன. இந்தியாவால் ஒரே நேரத்தில் இரண்டு அணிகளை கொண்டு, வெவ்வேறு தொடர்களில் விளையாட முடிகிறது. ஆனால், பிளேயிங் லெவனில் உள்ள ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலும், அவருக்கு நிகரான ஒரு மாற்று வீரரை கூட களமிறக்க முடியாத சூழலில் தான் இலங்கை அணி தத்தளித்து வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் அர்ஜுன் ரணதுங்கா தலைமையிலான குழு, தீர்வுகளை கண்டறிந்து இலங்கை அணி மீண்டும் வலுவாக கட்டமைக்கப்படும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.