டிரினிடாட்டில் இன்று வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா மோதும் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரண் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப்- மேயர்ஸ் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அணியின் ஸ்கோர் 65 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியை தீபக்ஹூடா பிரித்தார். அதிரடியாக ஆடிய மேயர்ஸ் 23 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.




அடுத்து களமிறங்கிய ப்ரூக்ஸ் – ஹோப் ஜோடியும் சிறப்பாக ஆடியது. அக்ஷர் படேல் பந்தில் ப்ரூக்ஸ் 36 பந்தில் 5 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரண்டன் கிங் டக் அவுட்டாகி சாஹல் பந்தில் வெளியேறினார். 130 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.


அப்போது, ஷாய் ஹோப்புடன் – கேப்டன் நிகோலஸ் பூரண் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக ஆடினால் ஆட்டம் போகப்போக பூரண் ரன்வேகத்தை அதிகரித்தார். தொடக்கத்தில் மந்தமாக ஆட்டத்தை தொடங்கிய பூரண் சிக்ஸர்களாக விளாசி இந்திய வீரர்களை கதிகலங்க வைத்தார். அவருக்கு ஷாய் ஹோப் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் ரன் வேகம் மளமளவென ஏறியது.




அணியின் ஸ்கோர் 247 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியை ஷர்துல் தாக்கூர் பிரித்தார். அவரது பந்தில் அதிரடி காட்டிய பூரண் போல்டானார். அவர் 77 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில், தொடக்கம் முதலே பொறுப்புடன் ஆடிய ஹோப் சதமடித்து அசத்தினார். 100வது போட்டியில் ஆடும் ஹோப்பிற்கு இது 13வது சதம் ஆகும். அடுத்து வந்த ரோவ்மென் பாவெல் 13 ரன்களில் அவுட்டானார்.




பூரண் ஆட்டமிழந்த பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் வேகம் குறைந்தது. 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 7 ஓவர்கள் வீசி 54 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் பூரண் களத்தில் இருந்த வரை அந்த அணி 350 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஆட்டமிழந்த பிறகு அந்த அணியின் ரன்வேகம் குறைந்துவிட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண