இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த போட்டியில் இந்திய ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக ஆவேஷ்கான் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அர்ஷ்தீப்சிங்கை புறக்கணித்தது ஏன் என்று பலரும் டுவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சங்கர் என்ற டுவிட்டர்வாசி, “ அர்ஷ்தீப்சிங் என்ன சுற்றுலாப் பயணியா..? அயர்லாந்தில் இருந்து இங்கிலாந்து, இங்கிலாந்தில் இருந்து வெஸ்ட் இண்டீஸ். அவருக்கு ஒரு முறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரது எதிர்காலம் என்ன ஆவது? 3 தொடர்களில் 1 ஆட்டம் மட்டும்தான் ஏன்? ஏன் ஆவேஷ்கானிற்கு மட்டும் வாய்ப்புகளுக்கு மேல் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது?”
என்று பதிவிட்டுள்ளார்.
தேபாசிஸ் என்ற நபர் “அர்ஷ்தீப் சிங் நல்ல அற்புதமான வீரர். ஆனால், அவருக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று தெரியவில்லை. ராகுல் டிராவிட்டின் மோசமான முடிவு” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர் அர்ஷ்தீப்சிங்கை ஏன் தவிர்க்கப் பார்க்கிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அர்ஷ்தீப்சிங் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் அடிவயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால்தான் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் களமிறக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்