நியூசிலாந்து வீரர் வில் யங் விக்கெட்டிற்கு டிஆர்எஸ் ரிவியூ எடுக்க அறிவுறுத்திய இந்திய அணி வீரர் சர்ஃபராஸ் கான் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இதில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இச்சூழலில் இன்று (அக்டோபர் 24) புனேவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அந்த வகையில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களம் இறங்கினார்கள். 22 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற டாம் லாதம் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், வில் யங் களம் இறங்கினார். 24 வது ஓவரை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். அப்போது வில் யங் பேட்டிங் செய்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தை வில் யங் ஓங்கி அடிக்க முயன்றார்.
டிஆர்எஸ் ரிவியூ எடுக்க அறிவுறுத்திய சர்ஃபராஸ் கான்:
அந்த பந்து பேட்டில் உரசி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கையில் சிக்கியது. ஆனால் அது பேட்டில் உரசியது சரியாக தெரியவில்லை. அதனால் அது விக்கெட்டா இல்லையா என்று அஸ்வின் மற்றும் ரிஷப் பண்ட் நம்பவில்லை. ஆனால் ஸ்லீப்பில் நின்ற சர்ஃபராஸ் அது விக்கெட் தான் என்று உறுதியுடன் இருந்தார். இதானல் கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் டிஆர்எஸ் ரிவியூ எடுக்கும்படி அழுத்தமாக கூறினார்.
இதனை தொடர்ந்து ரோஹித் ஷர்மா டிஆர்எஸ் ரிவியூ எடுத்தார். வில் யங்கின் பேட்டில் பந்து பட்டது தெரியவந்ததால் விக்கெட் கொடுக்கப்பட்டது. நியூசிலாந்து அணி தங்களது இரண்டாவது விக்கெட்டை எடுத்தது. விக்கெட் இல்லை என்று நினைத்தும் சர்ஃபராஸ் கான் விக்கெட் தான் டிஆர்எஸ் எடுங்கள் என்று ரோஹித் ஷர்மாவை வலியுறித்து அது வெற்றிகரமாக அமைந்ததால் சர்ஃபராஸ் கானை ரசிகர்கள் பாராடி வருகின்றனர். தற்போது வரை நியூசிலாந்து அணி 31 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா விளையாடி வருகின்றனர்.