இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று, போதிய உடல் தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி மூலமாக இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.


ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இந்தியர்களின் இதயங்களை தன்னுடைய செயலால் வென்றார். அதாவது, விளையாட்டு போட்டிகளில் இரு நாட்டு அணிகள் மோதுவதற்கு முன்பு அந்தந்த நாட்டு அணிகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்படுவது வழக்கம்.






இதன்படி, ஹராரேவில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய மற்றும் ஜிம்பாப்வே தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டது. இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதற்கு முன்பு, இந்திய வீரர்கள வரிசையாக தயாராக நின்றபோது இந்திய வீரர் கே.எல்.ராகுலும் தயாராக நின்று கொண்டிருந்தார். அப்போது, அவர் தேசிய கீதம் ஒலிக்கும் முன்பு சுவிங் கம் மென்று கொண்டிருந்தார்.














தேசிய கீதம் ஒலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியான பின்னர் அவர் தான் மென்று கொண்டிருந்த சுவிங் கம்மை கீழே துப்பி தேசிய கீதம் பாடுவதற்காக விரைப்புடன் நின்றார். கே.எல்.ராகுலின் இந்த செயல் இந்திய ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.






கே.எல்.ராகுலின் இந்த செயலுக்கு இந்திய ரசிகர்கள் டுவிட்டரில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல, நேற்றைய போட்டியில் இந்திய வீரர் இஷான் கிஷான் தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்தபோது தேனீ ஒன்று அவரை இடையூறு செய்தது. சில நொடிகள் தடுமாறினாலும் அவர் மீண்டும் தேசிய கீதத்தை தீரத்துடன் பாடினார். இவர்கள் இருவருடைய வீடியோக்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  


நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.