இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் வித்தியாசமான பேட்டிங்கிற்கு மிகவும் பெயர் பெற்றவர். முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி டிவிலியர்ஸுக்கு பிறகு, 360 டிகிரி பிளேயர் என்ற பெயரும் சூர்யகுமாருக்கு உண்டு. இந்தநிலையில், மும்பை தெருக்களில் சூர்யகுமார் யாதவ், அங்குள்ள சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
சூர்யகுமார் யாதவ் தெருவில் விளையாடுவதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அவரை சுற்றி நின்று உற்சாகமளித்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு சிலர் ’சுபலா’ ஹாட் ஆடுங்கள் என்று சூர்யாவிடம் கோரிக்கை வைத்தனர். அதனை சிரித்து கொண்டே ஏற்றுகொண்ட அவரும், அதனை நொடி விளையாடி அனைவரையும் மகிழ்வித்தார். இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
’சுபலா’ ஹாட் என்றால் என்ன..?
சுபலா என்பது ஹிந்தி வார்த்தை ஆகும். இது அங்குள்ள மக்களால் பயன்படுத்தப்படும் வார்த்தை. சுபலா என்பது பின்புறத்தை குறிக்கும் சொல் என்று கூறப்படுகிறது. அதனால் பின்புறத்தை திருப்பி ஆடும் இந்த ஷாட்டுக்கு சுபலா என்று பெயர் வைத்துள்ளனர்.
பார்டர் - கவாஸ்கர் டிராபியில் டெஸ்ட் அறிமுகம்:
மார்ச் 9 ஆம் தேதி தொடங்கிய பார்டர்-கவாஸ்கர் டிராபியில் சூர்யா தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். நாக்பூரில் நடந்த தொடரின் முதல் போட்டியில் டெஸ்ட் கேப் பெற்று தனது முதல் அறிமுக டெஸ்டில் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடும் வீரராக சூர்யா உருவெடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
இதுவரை சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக 1 டெஸ்ட், 20 ஒருநாள் மற்றும் 48 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்டில் 8 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் செய்யும் போது, 28.87 சராசரியில் 433 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் 64 ரன்கள்.
சர்வதேச டி20 போட்டிகளில், சூர்யா இதுவரை 46.53 சராசரி மற்றும் 175.76 ஸ்ட்ரைக் ரேட்டில் 1675 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்களும், 13 அரைசதங்களும் அடங்கும். தற்போது சர்வதேச டி20 பேட்ஸ்மேனாக சூர்யா முதலிடத்தில் உள்ளார்.