இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப்பண்ட். இந்திய அணியின் இளம் வீரரான இவர் சர்வதேச போட்டிகளில் கலக்கி வருகிறார்.


சமீப காலமாக, ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப்பை இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.


இச்சூழலில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கி நகர் அருகே குருகுல் நர்சன் பகுதியில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கினார். அவ்வழியக சென்றவர்கள் மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  


ரிஷப்பை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தவர்களில் ஒருவரான பேருந்து ஓட்டுநர், அவரை எப்படி மீட்டேன் என்பது குறித்து பேட்டி அளித்திருந்தார். தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய ஓட்டுநர் சுஷில் மான், "காயமடைந்தவர் யார் என்று தெரியவில்லை. 


எதிர் திசையில் இருந்து அதிவேகமாக வந்த எஸ்யூவி டிவைடரில் மோதியது. நான் என் பேருந்தை ஓரமாக நிறுத்துவிட்டு வேகமாக டிவைடரை நோக்கி ஓடினேன். ஜன்னல் வழியாக காரை ஓட்டியவர் வெளியேறினார். தான் ஒரு கிரிக்கெட்டர் என அவர் தெரிவித்தார். அவரது தாயாரை அவர் அழைக்கச் சொன்னார். 


ஆனால், அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. அது ரிஷப் பண்ட் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என் பேருந்தில் இருந்த மற்றவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்" என்றார்.


இந்நிலையில், ரிஷப்பை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஓட்டுநரை பாராட்டிய இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான வி.வி.எஸ். லட்சுமணன், "எரியும் காரில் இருந்து ரிஷப் பண்டை அழைத்துச் சென்று பெட்ஷீட்டால் போர்த்தி ஆம்புலன்சை அழைத்த ஹரியானா ரோட்வேஸ் டிரைவர் சுஷில்குமாருக்கு நன்றி. 


உங்கள் தன்னலமற்ற சேவைக்காக நாங்கள் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். #RealHero" என பதிவிட்டுள்ளார்.


விபத்தின்போது ரிஷப் பண்டின் தலைப்பகுதியில் 2 வெட்டுகளும், வலது முழங்காலில் தசை நார் கிழிந்துள்ளதாகவும், அதேநேரம் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






அவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வேகமாக சென்ற கார் டிவைடரில் சிக்கியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ஆபத்தான கட்டத்தை அவர் கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 


தனது தாயாருக்கு சர்பிரைஸ் கொடுப்பதற்காகவும் புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடவும் டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.