புகழ்பெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 27-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்கும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தன்வசம் தக்க வைத்துக்கொள்ளவே விரும்பும் என்பதால் முழு முனைப்புடன் களமிறங்குகிறது.


இந்த சூழலில், இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. முக்கியமான சூழலில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக வி.வி.எஸ், லட்சுமணனை நியமித்து பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.






இந்திய கிரிக்கெட்டிற்காக இளம் இந்திய வீரர்களை உருவாக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பொறுப்பில் உள்ளார். இந்திய அணியின் ஜாம்பவான் வீரராக வலம் வந்த லட்சுமணன் சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோருடன் கிரிக்கெட் ஒன்றாக ஆடியவர். 48 வயதான லட்சுமணன் இந்திய அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 781 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 17 சதங்கள், 56 அரைசதங்கள் அடங்கும். 86 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6 சதங்களுடன் 2 ஆயிரத்து 338 ரன்கள் எடுத்து்ளளார். 10 அரைசதங்களும் அதில் அடங்கும். இதுதவிர முதல்தர போட்டிகளில் 19 ஆயிரத்து 730 ரன்களை விளாசியுள்ளார்.


இந்த போட்டித் தொடரில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணி கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணிக்கு பலமாக விராட்கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.