ஆசிய கோப்பையின் வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணி மற்ற அணிகளை காட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், ஆசிய கோப்பையில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்காக அடிக்கப்பட்ட சதங்களிலே மறக்க முடியாத சதங்களின் பட்டியலை கீழே காணலாம்.
- விராட்கோலி - 183
2012ம் ஆண்டு இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வந்த விராட்கோலி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆசிய கோப்பையில் களமிறங்கினார். அந்த போட்டியில் 330 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்காக கவுதம் கம்பீர் டக் அவுட்டாக, சச்சின் 52 ரன்களில் வெளியேற விராட்கோலி பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுத்தார். அவர் 183 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
- சச்சின் டெண்டுல்கர் – 112
2012ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், உலக கிரிக்கெட்டிற்கும் மறக்க முடியாத ஆண்டு ஆகும். சாதனைகளின் மன்னன் சச்சின் டெண்டுல்கர் 2012ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் வங்காளதேச அணிக்கு எதிராக தனது 100வது சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் 12 பவுண்டரி 1 சிக்ஸருடன் சச்சின் டெண்டுல்கர் 114 ரன்களை விளாசினார்.
- வீரேந்திர சேவாக் – 119
2008 காலத்தில் 300 ரன்கள் என்பது அசாத்தியமான இலக்கு ஆகும். அப்போது எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரர்களில் சேவாக் தவிர்க்க முடியாதவர். கராச்சியில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் 299 ரன்களை விளாசிய நிலையில், 300 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்தியாவிற்கு சேவாக் மிரட்டலான தொடக்கத்தை அளித்தார். 95 பந்துகளில் 12 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 119 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். சேவாக்கிற்கு ரெய்னா அளித்த அதிரடி ஒத்துழைப்பால் இந்தியா 8 ஓவர்கள் மீதம் வைத்து வெற்றி பெறறது.
- ஷிகர்தவான் - 118
2018ம் ஆண்டு பாகிஸ்தான் அணியும் இந்தியாவும் மோதிய போட்டியில் இந்தியாவிற்கு பாகிஸ்தான் 238 ரன்களை இலக்காக நிர்ணயித்துது. முகமது ஆமீர், ஹசன் அலி, ஷதாப்கான் வேகத்தில் இந்தியாவை வீழ்த்த நினைத்த பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அந்த தொடரில் கேப்டனாக களமிறங்கிய ரோகித்சர்மாவும், ஷிகர்தவானும் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரையும் அவுட்டாக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் நொந்து போனர். அபாரமாக ஆடிய ஷிகர்தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 114 ரன்கள் குவித்து வெற்றியின் விளிம்பில் வந்தபோது அவுட்டானார்.
- ரோகித்சர்மா – 111
இந்திய கேப்டன் ரோகித்சர்மா கடந்த 2018ம் ஆண்டு ஆசிய கோப்பையில் கேப்டனாக களமிறங்கினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஷிகர்தவானுடன் தொடக்க வீரராக இறங்கி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அந்த போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்தியாவை 40வது ஓவரிலே வெற்றி பெற வைத்தார். 238 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்தியாவிற்காக ரோகித் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 111 ரன்கள் விளாசினார்.