இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை லீக் சுற்றுக்கான போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற உள்ளது. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கடும் எதிர்பார்ப்புக்கிடையில் இந்த போட்டிகள் மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளன. வெற்றியை வெடி வெடித்துக் கொண்டாட பாகிஸ்தான் ரசிகர்களும் இந்திய ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கும் இந்த போட்டி நடைபெற இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும். நேற்றுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி 90% மழையால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது, ஆனால் தற்போது, மழை பெய்ய குறைவான வாய்ப்பே உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் கூறியுள்ள செய்தி பலரை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது. இரு அணிகளை பொறுத்தவரை பேட்டிங்கில் இருவருமே அசுர பலத்துடன் இருப்பதால் இன்று போட்டி முழுவதும் மழையென பெய்யும் பவுண்டரிகளை பார்க்கலாம். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவை விட பாகிஸ்தானின் பவுலிங் லைன் அப் பல மடங்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கும். அதனை ஈடுகட்டுவதற்கு ரோகித் சர்மாவின் திட்டமிடலும், அதனை சரியாக செயல்படுத்தும் மனநிலையில் பந்துவீச்சாளர்களும் இருக்க வேண்டும்.


ஃபீல்டிங் இன்றைய போட்டியில் வெற்றிக்கான முக்கிய காரணியாக இருக்கும். ஏற்கனவே மழை பெய்து இருப்பதால் மைதானம் கொஞ்சம் வழுக்கும் என்றாலும் சமாளித்து ஃபீல்டிங் செய்பவர்கள் இன்று வெற்றிக்கான கூடுதல் வாய்ப்பை பெறுவார்கள். ஆனால் இன்று அனைவரது எதிர்பார்ப்பும் விராட் கோலி மீதும் பாபர் அசாம் மீதும்தான்.



விராட் vs பாபர்


சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஆசிய கோப்பையில் பாபர் அசாம் சரியாக விளையாடாதது பாகிஸ்தான் அணிக்கு கவலையளித்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். இந்த போட்டியில் 200 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி பாபர் அசாமின் அதிரடி சதத்தால் அந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பாபர் அசாம் 66 பந்தில் 110 ரன்களை குவித்தது மட்டுமின்றி, விராட் கோலியின் சாதனையும் ஒன்றை முறியடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரராக விராட் கோலி, கிறிஸ் கெயில், டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்சுக்கு பிறகு இடம்பிடித்துள்ளார்.


சர்வதேச டி20 மற்றும் டி20 லீக்குகள் என மொத்தமாக சேர்த்து டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களை எட்டியுள்ளார். இவர் 218 டி20 இன்னிங்ஸ்களில் 8000 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் விரைவில் 8000 ரன்களை எட்டிய 2வது வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். பாபர் அசாம் 218 டி20 இன்னிங்ஸ்களில் 8000 ரன்களை அடித்துள்ளார். இந்த சாதனையை விராட் கோலி 243 இன்னிங்ஸ்களில் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செயதிகள்: IND vs PAK T20 World cup: மழை கருணை காட்டுமா..? இந்தியா - பாகிஸ்தான் அணி இன்று மோதல்.. யாருக்கு வெற்றி.?


விராட் கோலி - பாபர் அசாம் ரன் குவிப்பு


T20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணி வீரர் விராட் கோலி 109 ஆட்டங்களில் விளையாடியுள்ளார், பாபர் அசாம் 92 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இன்றைய நிலவரப்படி 50.85 சராசரியாக வைத்துள்ள விராட் கோலி, 3712 ரன்கள் எடுத்துள்ளார். மறுபுறம், பாபர் அசாம் 43.66 சராசரியில் 3,231 ரன்கள் குவித்துள்ளார். பாபர் அசாமை விட 17 T20I போட்டிகள் அதிகமாக விளையாடி இருந்தாலும், கோஹ்லி தனது சராசரியை 50 க்கு மேல் வைத்திருப்பது என்பது சுவாரஸ்யமானது. பாபர் அசாம் இரண்டு சதங்களை அடித்திருந்தாலும், விராட் T20I வடிவத்தில் ஒரே ஒரு சதம்தான் அடித்துள்ளார். அதுவும் சமீபத்தில் கம்பேக் கொடுத்த ஆசிய கோப்பையில் தான் அடித்தார்.


இதில் பாபர் அசாம் 29 அரை சதங்கள் அடித்துள்ள நிலையில், கோலி 34 அரை சதங்களை அடித்துள்ளார். இதில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட், 138.09 ஆக உள்ளது. பாபர் அசாமின் ஸ்டரைக் ரேட் 129.65 ஆக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் பார்க்கும்போது பாபர் ஆசாமை விட வேகமாக விராட் கோலி ரன் குவிக்கிறார். அதுமட்டுமின்றி விராட் கோலி சிக்ஸர்கள் அதிகம் அடிக்கும் வீரராக இருக்கிறார். அவர் 109 சிக்ஸர்கள் அடித்துள்ள நேரத்தில், பாபர் அசாம் 50 சிக்ஸர்கள் தான் அடித்துள்ளார். பவுண்டரிகளை பொறுத்தவரை விராட் கோலி 331 பவுண்டரிகளும், பாபர் அசாம் 342 பவுண்டரிளும் அடித்து கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருந்துள்ளனர்.



பாபர் அசாம் vs இந்தியா (டி20):


போட்டிகள்: 3


ரன்கள்: 92


சராசரி: 46


அரை சதம்: 1


அதிகபட்சம்: 68*


ஸ்ட்ரைக் ரேட்: 129.57


விராட் கோலி vs பாகிஸ்தான் (டி20):


போட்டிகள்: 9


ரன்கள்: 406


சராசரி: 67.66


அரை சதம்: 4


அதிகபட்சம்: 78*


ஸ்ட்ரைக் ரேட்: 119.06


விராட் கோலி மீது எதிர்பார்பு


இந்த ரெக்கார்டுகளை வைத்துப் பார்க்கும்போது கோலியின் கைகள் சற்று ஓங்கி இருந்தாலும், பாகிஸ்தானுடன் விளையாடும்போது கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறைவதை கருத்தில் கொள்ள வேண்டும். சாதாரணமாக 139 ஸ்ட்ரைக் ரோட்டில் ரன் குவிக்கும் விராட் கோலி, உலகக்கோப்பைகளில் 129 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆடுகிறார். அதிலும் பாகிஸ்தானிடம் 119 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்கிறார். இது இந்திய அணியின் ரன் வேகத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் என்றாலே விராட் கோலி காலில் சலங்கை கட்டியது போல்தான் இருக்கும். நான்கில் ஒரு போட்டியில் அரை சதம் அடிக்கும் கோலி, இந்த போட்டியிலும் அரை சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. இன்று செஞ்சுரி அடித்தால் பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து செஞ்சுரி அடித்து கேன் வில்லியம்சன்னுடன் சாதனையை பகிர்ந்து கொள்வார். அதே போல எதிர்பார்ப்பு பாபர் அசாம் மீதும் எழுந்துள்ளது.