சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பது மிகவும் கடினம் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம். ரன் மிஷின் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி நடப்பு உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு:
அதன்படி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 113 பந்துகள் களத்தில் நின்ற விராட் கோலி 117 ரன்களை குவித்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ( 50 )அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை பெற்றார் கோலி. மேலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகில் விராட் கோலியின் 80-வது சதம் இதுவாகும். அதேநேரம் விராட் கோலி 100 சதம் அடிப்பார இல்லையா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான பிரையன் லாரா விராட் கோலியால் அந்த சாதனையை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலியால் முடியாது:
இது தொடர்பாக பேசியுள்ள அவர், “விராட் கோலி சுயநலமாக விளையாடுகிறார் என்று பேசக் கூடியவர்கள் எல்லாம், அவர் மீது பொறாமை கொண்டவர்கள். அவர் அடித்திருக்கும் ரன்களை கண்டு பொறாமைப் படுகிறார்கள். நான் விளையாடும் பொழுதும் இப்படியான விஷயங்களை சந்தித்து இருக்கிறேன். சச்சின் சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே நெருங்க முடியும். ஆனால் விராட் கோலியால் அந்த சாதனையை முறியடிக்க முடியாது.
கோலியின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் தீவிர ரசிகன். அவர் அனைத்தையும் கொடுத்துப் போட்டிக்கு தயாராகும் விதம் அபாரமானது. இப்படி இருக்கும் பொழுது நீங்கள் எப்படி அவருக்கு ரசிகராக இல்லாமல் இருக்க முடியும். எனது வாழ்த்துக்கள் எப்பொழுதும் விராட் கோலிக்கு உண்டு. அவர் சச்சின் போல நூறு சதங்கள் அடித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். எனக்கு சச்சின் ஒரு அன்பான நண்பர். ஆனால் நான் முன்பு கூறியது போலவே விராட் கோலிக்கு நான் தீவிர ரசிகன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Pro Kabaddi 2023: இன்று ப்ரோ கபடி லீக்கில் இரண்டு போட்டிகள் - பெங்கால் vs ஜெய்ப்பூர், குஜராத் vs பாட்னா! யாருக்கு வெற்றி?
மேலும் படிக்க: T20 WC 2024: டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா விராட் கோலி? பி.சி.சி.ஐ. ஆலோசனை!