உலககோப்பை டி20 தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் வங்காளதேச அணியுடன் இந்திய அணி மோதி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட்கோலி உலக சாதனை படைத்துள்ளார்.
டி20 உலககோப்பையில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற அரிய சாதனையை விராட்கோலி இன்றைய போட்டியில் படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் 16 ரன்களை எடுத்தபோது இந்த அரிய சாதனையை படைத்தார். உலககோப்பை டி20 தொடரில் இதற்கு முன்பு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிலா ஜெயவர்தனே 1016 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது, விராட்கோலி அவரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
விராட்கோலியின் சாதனையை முறியடிக்க தற்போது வரை யாரும் அடுத்தடுத்த இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் மஹிலா ஜெயவர்தனே 1016 ரன்களுடனும், மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 965 ரன்களுடனும், நான்காவது இடத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 921 ரன்களுடனும், 5வது இடத்தில் இலங்கை முன்னாள் வீரர் தில்ஷான் 897 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நடப்பு உலகத் தொடர் தொடங்கியது முதல் விராட்கோலி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவை கடைசி வரை போராடி வெற்றி பெற வைத்தார்.
விராட்கோலி 113 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் 35 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 891 ரன்கள் எடுத்துள்ளார். இது மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் 8,074 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 12,344 ரன்களும் விளாசியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் 5 சதங்கள், 44 அரைசதங்களுடன் 6 ஆயிரத்து 624 ரன்களை விளாசியுள்ளார்.