இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்ட விராட் கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.
கம்பேக் தந்த கோலி:
2027ம் ஆண்டு உலகக்கோப்பை வரை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரோகித் மற்றும் விராட் கோலி இருவரும் உலகக்கோப்பையில் ஆட ஆர்வம் காட்டவில்லை என்று அகர்கர் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சூழலில் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்ற விராட் கோலி முதல் 2 போட்டியில் டக் அவுட்டான நிலையில் நேற்று நடந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் 74 ரன்கள் எடுத்த விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சங்ககராவை பின்னுக்குத் தள்ளி 2வது இடம் பிடித்தார்.
சச்சினை பின்னுக்குத் தள்ளிய கோலி:
இதுமட்டுமின்றி மற்றுமொரு அரிய சாதனையை விராட்கோலி படைத்துள்ளார். அதாவது, வெள்ளை நிற பந்தில் ஆடப்படும் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்த சச்சினிடம் இருந்து இந்த சாதனையை விராட் கோலி நேற்று படைத்தார்.
இதற்கு முன்பு இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் 18 ஆயிரத்து 436 ரன்களுடன் தன்வசம் வைத்திருந்தார். விராட் கோலி இந்த சாதனையை நேற்று தகர்த்து தற்போது 18 ஆயிரத்து 443 ரன்களுடன் யாருமே நெருங்க முடியாத இடத்தில் உள்ளார்.
புது வரலாறு:
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரத்து 255 ரன்களும், டி20 போட்டிகளில் 4 ஆயிரத்து 188 ரன்களும் என மொத்தம் 18 ஆயிரத்து 443 ரன்கள் எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்து 426 ரன்களும், டி20யில் 10 ரன்களும் என மொத்தம் 18 ஆயிரத்து 436 ரன்கள் எடுத்துள்ளார்.
வெள்ளை நிற பந்துகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:
1. விராட் கோலி - 18 ஆயிரத்து 443 ரன்கள்
2. டெண்டுல்கர் - 18 ஆயிரத்து 436 ரன்கள்
3. சங்ககரா- 15 ஆயிரத்து 616 ரன்கள்
4. ரோகித் சர்மா - 15 ஆயிரத்து 528 ரன்கள்
5. ஜெயவர்தனே - 14 ஆயிரத்து 133 ரன்கள்
6. ரிக்கி பாண்டிங் - 14 ஆயிரத்து 105 ரன்கள்
7. ஜெயசூர்யா - 14 ஆயிரத்து 059 ரன்கள்
8. ப்ரையன் லாரா - 12 ஆயிரத்து 379 ரன்கள்
9. காலீஸ் - 12 ஆயிரத்து 245 ரன்கள்
10. தில்ஷன் - 12 ஆயிரத்து 179 ரன்கள்
இந்த பட்டியலில் தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மட்டுமே ஆவார்கள். மற்ற வீரர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் டி20யின் தொடக்க காலத்திலே ஓய்வு பெற்ற வீரர்கள் ஆவார்கள்.
வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் சச்சினை விராட் கோலி பின்னுக்குத் தள்ளியிருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை சச்சினே தன்வசம் வைத்துள்ளார். வேறு எந்த வீரரும் நெருங்க இயலாத அளவிற்கு சச்சின் டெண்டுல்கர் 34 ஆயிரத்து 357 ரன்களுடன் உள்ளார். அடுத்த இடத்தில் சங்ககரா உள்ளார்.
அவர் 28 ஆயிரத்து 16 ரன்களுடன் உள்ளார். இவர்கள் இருவருக்கும் அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். அவர் 27 ஆயிரத்து 673 ரன்களுடன் உள்ளார். ஒப்பீட்டளவில் சச்சின் 782 இன்னிங்சிலும், சங்ககரா 666 இன்னிங்சிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர். விராட் கோலி 620 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளார்.