கவுகாத்தியின் பரஸ்பரா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் விராட்கோலியின் அபார சதம், சுப்மன்கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களின் உதவியால் இந்திய அணி 373 ரன்களை குவித்தது.


இதையடுத்து, இமாலய இலக்கை நோக்கி இலங்கையின் ஆட்டத்தை பதும் நிசங்கா – பெர்னாண்டோ தொடங்கினர். பெர்னாண்டோ 5 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் டக் அவுட்டாகினார். அடுத்து வந்த அசலங்கா நிதானமாக ஆடினார். ஆனாலும், அவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.




64 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணிக்காக நிசங்கா – டி சில்வா ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதனமாக ஆடினார். நிசங்கா பொறுப்புடன் ஆடி அரைசதம் விளாசினார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு அளித்த டி சில்வா அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிலையில் 40 பந்துகளில் 47 ரன்களில் அவுட்டானார்.


அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சிறப்பாக ஆடி வந்த நிசங்கா 72 ரன்களில் அவுட்டானார். அடுத்து இலங்கை கேப்டன் சனகா களமிறங்கினார். மறுமுனையில் ஆல் ரவுண்டர் ஹசரங்கா 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இளம் வீரர் வெல்லாலகே டக் அவுட்டாகினார். பின்னர், சனகாவிற்கு ஒத்துழைப்பு அளித்த கருணரத்னே 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.


இலங்கை அணிக்காக கடைசி வரை போராடிய சனகா அபாரமாக சதம் அடித்தார். அவர் ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்துவீசி 8 ஓவர்கள் வீசி 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜ் சிறப்பாக வீசி 7 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல் மற்றும் சாஹல் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  


இலங்கை அணியின் கேப்டன் தசன் சனாகா யாரும் சரியாக ஒத்துழைப்பு அளிக்காததால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் சனகா 88 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 108 ரன்கள் எடுத்திருந்தார். ரஜிதா 9 ரன்கள் எடுத்திருந்தார். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்த போட்டியில் 87 பந்தில் 113 ரன்கள் குவித்த விராட் கோலிக்கு ஆட்டநாயகம்ன் விருது வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதினை வென்ற விராட் கோலி பேசியதாவது, ’தான் நிரந்தரமாக விளையாடிக்கொண்டிருக்கப்போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார். இதனை பலரும் இது அவரது ஓய்வு குறித்து கூறியுள்ளார் என கூறிவருகின்றனர்.  இது தொடர்பாக அவர் மேற்கொண்டு கூறுகையில், போட்டியில் எதுவும் கடினம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. போட்டிக்கு நான் தயாராவதும், நோக்கமும் எப்போதும் ஒன்றாகவே உள்ளது. நமது அணிக்கு கூடுதலாக 25 முதல் 30 ரன்கள் தேவை என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேன். போட்டியின் 2-வது பாதியில் மைதானத்தின் சூழ்நிலையை நான் புரிந்துகொள்ள எப்போதும் முயற்சி செய்வேன். மிகவும் வலிமையான ஸ்கோரை பெற முயற்சி செய்வேன். விரக்தி உங்களை எங்கும் கொண்டுசெல்லாது என்பதை என் கடந்த காலங்களில் நான் கற்றுக்கொண்டேன். இளம் வீரர்களுக்கு சொல்வது இதுதான், நீங்கள் எதைப்பற்றியும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.



விராட் கோலி


 


நீங்கள் மைதானத்திற்குள் சென்றபின் பயமின்றி விளையாடவேண்டும். எல்லாவிஷங்களையும் கட்டுப்படுத்தமுடியாது. சரியான காரணங்களுக்காக நீங்கள் விளையாடவேண்டும், இது தான் உங்களின் கடைசி ஆட்டம் என்ற மனநிலையில் அனைத்து போட்டிகளிலும் நீங்கள் விளையாடவேண்டும். அதன் மூலம் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். விளையாட்டு எப்போதும் தொடர்ந்து முன்னோக்கி சென்றுகொண்டே இருக்கும். நான் நிரந்தரமாக விளையாடப்போவதில்லை, அதேநேரத்தில் நான் மகிழ்ச்சியான சூழ்நிலையில் உள்ளேன். விளையாடும் நேரங்களில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்' என கூறியுள்ளார்.