இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரில் முதல் டி20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு நடைபெற உள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி டி20 தொடரில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றது. அதன்பின்னர் இந்திய அணி இங்கிலாந்து தொடரில் களமிறங்க உள்ளது. கடைசியாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் காமன்வெல்த் போட்டியிலும் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது. ஆனால் இந்த இரண்டு இறுதிப் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து ஏமாற்றியது.
ஆகவே இந்திய மகளிர் அணி இம்முறை நடைபெறும் இங்கிலாந்து தொடரில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டி20 தொடருக்கான அணியில் ரிச்சா கோஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு இடம்பிடித்துள்ளார். அத்துடன் கே.பி.நவிக்ரா முதல் முறையாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவர்களுடன் சேர்ந்து ஸ்மிருதி மந்தானா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரும் நல்ல ஃபார்மில் இருக்கும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
இந்தியா-இங்கிலாந்து டி20 தொடர்:
முதல் டி20- செப்டம்பர் 10
இரண்டாவது டி20 -செப்டம்பர் 13
மூன்றாவது டி20- செப்டம்பர் 15
இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடர்:
முதல் ஒருநாள் - செப்டம்பர் 18
இரண்டாம் ஒருநாள் - செப்டம்பர் 21
மூன்றாம் ஒருநாள்- செப்டம்பர் 24
இந்திய மகளர் அணி (டி20):
ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), ஸ்மிருதி மந்தானா(துணை கேப்டன்), ஷெஃபாலி வர்மா, தீப்தி சர்மா, பூஜா வத்சரக்கர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்நேஹ் ரானா, ரேனுகா தாகூர், மேக்னா சிங், ராதா யாதவ், தானியா பாட்டியா, ராஜேஸ்வரி கெய்க்வாட், தயாளன் ஹேமலதா, சிம்ரன் பகதூர், ரிச்சா கோஷ், கே.பி.நவ்கிரே
ஒருநாள் தொடருக்கான அணியில் இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளர் ஜூலன் கோசாமி பங்கேற்க உள்ளார். இது அவருக்கு கடைசி ஒருநாள் தொடராக அமைய உள்ளது. இதனால் இங்கிலாந்து ஒருநாள் தொடரை வென்று அவருக்கு சிறப்பான பிரியாவிடை அளிக்க இந்திய வீராங்கனைகள் திட்டமிட்டுள்ளனர். இந்திய மகளிர் அணியின் ஜாம்பவான் வீராங்கனை மித்தாலி ராஜ் சமீபத்தில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அவருக்கு பின்பு இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஹர்மன்பிரீத் கவுர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.