இணையத்திற்குள் நுழைந்தாலே இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி குறித்து செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. 14 மாதங்ககளுக்குப் பின்னர் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய ரோகித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனார். இதனால் இவர் டி20 வகை கிரிக்கெட்டிற்கு ஒத்துவரமாட்டார் என விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இவர் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தினைக் காண ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் இவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் விராட் கோலி கோல்டன் டக் ஆனார். அதாவது தான் எதிர்கொண்ட முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 


விராட் கோலி அணிக்கு ஒரு பேட்ஸ்மேனாக அளிக்கும் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் அவரது ஃபீல்டிங். விராட் கோலி நேற்று சிறப்பான முறையில் ஃபீல்டிங் செய்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தர முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக போட்டியின் 17வது ஓவரை வீசிய வாசிங்டன் சுந்தரின் பந்தை ஆஃப்கான் அணியின் வீரர் ஜனட் சிக்ஸருக்கு விரட்ட பந்தை தூக்கி அடித்தார். அப்போது லாங் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டு இருந்த விராட் கோலி உயரத் தாவிக் குதித்து பந்தை தடுத்தார். விராட் கோலி இந்த பந்தை தடுக்காமல் போயிருந்தால் நிச்சயம் போட்டியில் ஆஃப்கான் வெல்ல வாய்ப்பு அதிகமாகியிருக்கும்.






விராட் கோலி நன்கு உயரத்தில் இருந்து வந்த பந்தை கணித்து தடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதேபோல் போட்டியின் 19வது ஓவரினை வீசிய ஆவேஷ் கான் பந்தினை நஜிபுல்லா ஜார்தான் பந்தை தூக்கி அடித்தார். அந்த பந்தை கிட்டத்தட்ட பல மீட்டர்கள் தூரம் ஓடிவந்து ரன்னிங்கில் இருக்கும்போதே சிறப்பாக பந்தை கணித்து கேட்ச் பிடித்தார். விராட் கோலி இந்த கேட்ச் பிடித்தது இந்திய அணி போட்டியை டிரா செய்ய உதவியது. 






விராட் கோலியின் பேட்டிங்கினைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த கோலி, அவரது சிறப்பான ஃபீல்டிங்கினால் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். இந்த போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்த விரார் கோலிக்கு சிறந்த ஃபீல்டருக்கான விருது வழங்கப்பட்டது.