இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு இது சவாலான காலகட்டம் என்றே சொல்ல வேண்டும். இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் கடந்த 5 நாட்களில் ஓய்வு அறிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். 

இந்திய அணியை கடந்த பல ஆண்டுகளாக தாங்கி நின்ற விராட் கோலி, அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா 3 பேரும் ஓய்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஒரே ஒரு டெஸ்ட் தொடரே ஆகும். அதுதான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடைசியாக நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி ஆகும். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருந்த நிலையில், சொந்த மண்ணில் நியூசிலாந்திற்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் மொத்தமாக இழந்தது. இதையடுத்து, நெருக்கடியான சூழலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்கிய இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த நிலையில் அடுத்தடுத்து நடந்த போட்டிகளில் மிகவும் மோசமாக ஆடிய தொடரையே இழந்தது. 

அந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக அமைந்தது. அது அவர்கள் மீது மிகப்பெரிய அளவு விமர்சனத்தை உண்டாக்கியது. 

விராட் கோலி:

முதல் டெஸ்ட் - 5 ரன்கள், 100 ரன்கள்

2வது டெஸ்ட் - 7 ரன்கள், 11 ரன்கள்

3வது டெஸ்ட் - 3 ரன்கள்

4வது டெஸ்ட் - 36 ரன்கள், 5 ரன்கள்

5வது டெஸ்ட் -  17 ரன்கள், 6 ரன்கள்

அந்த தொடரில் மொத்தம் 9 இன்னிங்சில் ஆடிய விராட் கோலி வெறும் 190 ரன்கள் மட்டுமே எடுத்தார். விராட் கோலி இதுபோல மோசமான ஃபார்மில் முன் எப்போதும் இருந்தது இல்லை. குறிப்பாக, கவர் டிரைவ் ஷாட்களின் ராஜா என்று வர்ணிக்கப்படும் விராட் கோலி அந்த கவர் டிரைவ் ஷாட்களிலே அவுட்டானது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது. 

ரோகித் சர்மா:

முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாத கேப்டன் ரோகித் சர்மா 2வது டெஸ்ட் போட்டி முதல் இந்திய அணியுடன் இணைந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பெரியளவு சோபிக்காத ரோகித் சர்மா அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல கிடைத்த அருமையான வாய்ப்பாக இது பார்க்கப்பட்டது. 

ஆனால், ரோகித் சர்மா அந்த தொடரில் ஆடிய எஞ்சிய 4 போட்டிகளிலும் சொதப்பலான பேட்டிங்கையே  வெளிப்படுத்தினார். அவர் தொடக்க வீரராகவும், மிடில் ஆர்டரிலும் மாறி, மாறி வந்ததும் அவரது பேட்டிங் திறனை பாதித்ததுடன் அணியையும்  பாதித்தது. 

2வது டெஸ்ட் - 3 ரன்கள், 6 ரன்கள்

3வது டெஸ்ட் - 10 ரன்கள்

4வது டெஸ்ட் - 3 ரன்கள், 9 ரன்கள்

கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா ஆடவில்லை.

அந்த தொடரில் ரோகித் சர்மா 3 டெஸ்ட் போட்டிகளில் 5 இன்னிங்சில் ஆடி மொத்தமாக 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது அணிக்கும், ரோகித் சர்மாவிற்கும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. 

அஸ்வின்:

இந்திய அணிக்காக இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த அஸ்வினுக்கு அந்த தொடர் மிகவும் சவாலானதாகவே மாறியது. மேலும், இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக அவர் பாதியிலே ஓய்வை அறிவித்துவிட்டு இந்தியா திரும்பினார். 

2வது டெஸ்ட் - 18 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மற்றும் 29 ரன்கள் எடுத்தார்.

முதல் டெஸ்ட் மற்றும் 3வது டெஸ்டில் அஸ்வினுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன்பின்பு அவரே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.  அதற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அஸ்வின் பந்துவீச்சு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

நியூசிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்டில் 18 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டையும், இரண்டாவது டெஸ்டில் 49 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டையும், கடைசி டெஸ்டில் 31 ஓவர்கள் வீசி 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அந்த தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சொதப்பலாகவே ஆடியதால் இந்திய அணியும் தொடரை இழந்தது.  என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

இவர்கள் 3 பேரும் 35 வயதை கடந்துவிட்டதாலும், இந்திய அணியை மறுகட்டமைக்கும் நல்ல எண்ணத்திலும் தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். அவர்களது இடம் மற்ற வீரர்களால் நிரப்ப முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி மட்டுமின்றி சவாலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சவாலை பிசிசிஐ எப்படி எதிர்கொள்ளப்போகிறது? என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.