ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. 


இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் அரைசதம் முக்கிய காரணமாக இருந்தது. இந்த போட்டியில் இவர் 48 பந்துகளில் 63 ரன்கள் குவித்து அசத்தினார். 


இந்தநிலையில், விராட் கோலி இந்த போட்டியின் மூலம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதன்படி, விராட் கோலி சர்வதேச அளவில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் குவித்து இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். ராகுல் டிராவிட்டின் மொத்த ரன் எண்ணிக்கையைவிட 14 ரன்கள் அதிகமாக குவித்துள்ளார். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் 34,375 குவித்து முதலிடத்தில் உள்ளார். 


டிராவிட் போல் விராட் கோலி இதுவரை சர்வதேச அளவில் ஆசியா லெவன் அல்லது ஐசிசி லெவன் அணிக்காக விளையாடியதில்லை.






சர்வதேச அளவில் இந்தியாவிற்கு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல்:



  • 664 போட்டிகள் : சச்சின் டெண்டுல்கர் - 34,357 ரன்கள்

  • 471 போட்டிகள் : விராட் கோலி - 24,078 ரன்கள்

  • 404 போட்டிகள் : ராகுல் டிராவிட் - 24,064 ரன்கள்

  • 421 போட்டிகள் : சவுரவ் கங்குலி - 18,433 ரன்கள்

  • 535 போட்டிகள் : எம்எஸ் தோனி - 17,3092 ரன்கள்






கடந்த மாதம் ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 66 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தபோது ரிக்கி பாண்டிங்கின் 71 சதங்களை விராட் கோலி சமன் செய்தார். இதன்மூலம், அதிக சர்வதேச சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.