டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் இந்தியா அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் இந்தியா அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணி இன்று நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அசத்தலாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின்னர் வந்த விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி விராட் கோலி அசத்தியுள்ளார்.
அதாவது டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கெயில் அடித்திருந்த 965 ரன்களை விராட் கோலி தாண்டியுள்ளார். விராட் கோலி தற்போது டி20 உலகக் கோப்பை தொடர்களில் 989 ரன்கள் அடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:
மகேலா ஜெயவர்தனே- 1016 ரன்கள் :
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார். இவர் 31 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 1016 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அத்துடன் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
விராட் கோலி- 989 ரன்கள்:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இவர் நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் 2 அரைசதம் விளாசி அசத்தி வருகிறார். இவர் தற்போது வரை 23 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 989 ரன்கள் குவித்துள்ளார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இவர் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
கிறிஸ் கெயில்- 965 ரன்கள்:
டி20 போட்டிகளில் எப்போதும் அதிரடி காட்டும் யுனிவர்செல் பாஸ் கிறிஸ் கெயில் டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் தன்னுடைய அதிரடியை தொடர்ந்து காட்டியுள்ளார். இவர் 26 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 965 ரன்களை இவர் விளாசி உள்ளார். மேலும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 9 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
ரோகித் சர்மா- 904 ரன்கள்:
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது வரை 35 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 904 ரன்கள் அடித்துள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்து முன்னேறும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.