வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று ஒரே நாளில் 3 போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி, சிட்னியில் இன்று காலை தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் மோதியது. 


முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக பவுமா மற்றும் டி காக் களமிறங்கினர். வழக்கம்போல், பவுமா ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேற, டி காக் வலுவான தொடக்கம் தர தொடங்கினார். மறுபுறம், ரோசோவ் ரன் வேட்டையை தொடங்கினார். இருவரும் தங்கள் பங்கிற்கு அதிவேகமாக ரன்களை குவித்து, வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டனர். 


தொடர்ந்து, 38 பந்துகளில் 63 ரன்கள் குவித்த டிகாக் அஃபிஃப் குஷைன் பந்துவீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்சானார். மறுபுறமும் அதிரடியாக விளையாடிய ரோசோவ் 52 பந்துகளில் தனது  சதத்தை பதிவுசெய்தார். இதன்மூலம், ரோசோவ் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையும், ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பை தொடரில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையும் பெற்றார். இறுதியில் 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. 



206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம், தென்னாப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் மட்டும் 34 ரன்கள் எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக நார்ட்ஜே 4 விக்கெட்களும், ஷம்சி 3 விக்கெட்களும் எடுத்திருந்தனர்.