Pran Pratishtha : அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி கும்பாபிஷேகம் விழா நடத்தப்பட உள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்தநிலையில், அயோத்தியில் நடைபெறவுள்ள இந்த கும்பாபிஷேக விழாவுக்காக இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அயோத்தியில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பு தற்போது வந்துள்ளது. இதுகுறித்தான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரலான படத்தில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான அழைப்புக் கடிதத்துடன் காணப்பட்டனர்.
முன்னதாக நேற்று முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. ஜார்க்கண்ட் பாஜக அமைப்பு அமைச்சர் கர்மவீர் சிங், ராம் மந்திர் பிரான் பிரதிஸ்தாவுக்கான அழைப்புக் கடிதத்தை மகேந்திர சிங் தோனியிடம் வழங்கினார். அதன்பிறகு, தோனி தன்னை அழைக்க வந்த விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதேபோல், கடந்த ஜனவரி 13-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு வந்தது.
இதையடுத்து, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு விராட் கோலி, முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் போன்ற கிரிக்கெட் வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
6 ஆயிரம் பேருக்கு அழைப்பு:
வருகின்ற ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பாபிஷேகத்திற்கு சுமார் 6 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர்களை தவிர இந்த விழாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பிரபல தொழிலதிபர்களும் வருகை தர இருக்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்கள்
பிரதமர் நரேந்திர மோடி , உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது .
வரலாற்று சிறப்புமிக்க பழங்குடியினர் பங்கேற்பு
இந்திய வரலாற்றில் முதல்முறையாக மலைகள், காடுகள், கடலோரப் பகுதிகள், தீவுகள் போன்ற பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் ஒரே இடத்தில் இதுபோன்ற விழாவில் பங்கேற்கின்றனர். இது தனித்துவமாக பார்க்கப்படுகிறது. இதனுடன், சைவ, வைஷ்ணவம், ஷக்தா, கணபத்யா, பாத்யா, சீக்கிய, புத்த, ஜைன, தஷ்னம் சங்கர், ராமானந்த், ராமானுஜ், நிம்பர்கா, மாதவ, விஷ்ணு நமி, ராம்சனேஹி, கிசாபந்த், கரிப்தாசி, கௌடியா, கபீர்பந்தி, வால்மீகி, சங்கர்தேவ் (அசாம்) , மாதவ் தேவ், இஸ்கான், ராமகிருஷ்ணா மிஷன், சின்மோய் மிஷன், பாரத் சேவாஷ்ரம் சங்கம், காயத்ரி பரிவார், அனுகுல் சந்திரா தாகூர் பாரம்பரியம், ஒடிசாவின் மகிமா சமாஜ், அகாலி, நிரங்காரி, நாம்தாரி (பஞ்சாப்), ராதாஸ்வாமி மற்றும் சுவாமிநாராயண், வர்காரி, வீர ஷைவம் போன்ற பிரிவினரும் பங்கேற்க இருக்கின்றனர்.