கிரிக்கெட் உலகின் அரசன், ரன்மெஷின் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விராட் கோலி. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் முதல் டெஸ்டில் சதம் விளாசிய பிறகு, விராட் கோலி அடுத்து நடந்த 4 டெஸ்ட் போட்டியிலும் மிகவும் மோசமாக ஆடி அவுட்டானார். குறிப்பாக, ஆஃப் சைட் செல்லும் பந்தில் அவர் அவுட்டானது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.
ரஞ்சியில் கோலி:
இந்த நிலையில், இழந்த ஃபார்மை மீட்பதற்காக விராட் கோலி ரஞ்சி போட்டிக்குத் திரும்பியுள்ளார். டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பையில் விராட் கோலி இன்று மீண்டும் களமிறங்கினார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் விராட் கோலி களமிறங்குவதால் இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
விராட் கோலி இன்று களமிறங்கியுள்ள இந்த போட்டியை காண காலை முதலே ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். டெல்லி மற்றும் ரயில்வே அணிகள் மோதும் இந்த போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சர்வதேச போட்டிக்கு நிகராக காலை முதலே கூட்டம் குவிந்தது.
15 ஆயிரம் ரசிகர்கள்:
இந்த போட்டியை காண இன்று மட்டும் சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர். போட்டியை காண முதலில் நுழைவு வாசல் 16 மற்றும் 17 மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. ஆனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் நுழைவுவாசல் 18 திறக்கப்பட்டது.
போலீஸ் தடியடி:
ஆனாலும், விராட் கோலியைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த டெல்லி போலீசார் தடியடி: நடத்தினர். இந்த கூட்ட நெரிசல் காரணமாக சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விராட் கோலி ஆடுவதால் இந்த போட்டியை காண 10 ஆயிரம் ரசிகர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவு ரசிகர்கள் குவிந்தனர்.
அதிரும் அரங்கம்:
விராட்கோலியின் ஆட்டத்தை காண்பதற்காக அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி வழியும் வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. விராட் கோலி கடைசியாக 2012ம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடினார்.
தற்போது இந்த போட்டியில் ரயில்வே அணி முதலில் பேட் செய்து ஆடி வருகிறது. அவர்கள் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களுடன் ஆடி வருகின்றனர். இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக ஆயுஷ் பதோனி உள்ளார். விராட் கோலி மட்டுமின்றி வளர்ந்து வரும் வீரர்களான யஷ் துள், ரகுவன்ஷி, ஷிவம் ஷர்மா போன்ற வீரர்களும், இந்திய வீரரான நவ்தீப் சைனியும் டெல்லி அணிக்காக ஆடி வருகின்றனர். ரயில்வே அணிக்காக உபேந்திர யாதவ் 75 ரன்களுடன் தனி ஆளாக ஆடி வருகிறார். கரண்சர்மா 50 ரன்கள் எடுத்தார்.