தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ரோஹித் ஷர்மாவின் திறமைகளை அதிகம் இழக்க நேரிடும் என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை. இரண்டு வருடமாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இப்போது சோர்ந்து போய் விட்டேன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ரோஹித் ஷர்மாவின் திறமைகளை அதிகம் இழக்க நேரிடும். 




நான் ஒருநாள் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறேன். தயாராக இருந்தேன். என்னைப் பொறுத்த வரையில், நான் எப்போதும் தேர்வுக்கு தயாராக இருக்கிறேன். எப்போதும் விளையாட ஆர்வமாக இருந்தேன்.


டி20 கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்கும் முன் பிசிசிஐயிடம் என் கருத்தை சொன்னேன். அதை பிசிசிஐ வெகுவாக ஏற்றுக்கொண்டது. அதில் எந்த தவறும் இல்லை. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று கூறி நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக தொடர்வேன் என்றும் அவர்களிடம் கூறினேன். அவர்கள் ஆலோசனைக்கு பிறகு நான் ஒருநாள் போட்டி கேப்டனாக நான் இருக்கமாட்டேன் எனக் கூறினார்கள். ஓகே ஃபைன் என்று கூறிவிட்டேன். டி20 கேப்டன் பதவியில் இருந்து வெளியேறுகிறேன் எனக்கூறும்போது வேண்டாம் என யாரும் தடுக்கவில்லை” எனத் தெரிவித்தார். 


 






தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் டி20 தொடரிலும் விளையாட உள்ளது.  டி20 தொடர் விளையாடுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.


ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் தென்னாப்ரிகாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்திருக்கும் நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது. பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளானது. 


இதனிடையே இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "விளையாட்டுதான் மிக உயர்ந்தது. விளையாட்டைவிட யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. எந்த வீரர்களிடையே என்ன நடக்கிறது என்பதை என்னால் கூற முடியாது. அது சம்பந்தப்பட்ட கூட்டமைப்புகள் / சங்கங்களின் வேலை. அவர்கள் இதுகுறித்து பேசினால் நன்றாக இருக்கும்" எனக் கூறியிருந்தார். 


முன்னதாக, கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கமளித்த பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி  “நான் தனிப்பட்ட முறையில் கோலியிடம் டி20 கேப்டன்சியை விட வேண்டாம் என கூறினேன். அவருக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது என்பது எனக்கும் தெரியும். அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். இந்திய அணியை நீண்டகாலமாக வழிநடத்துகிறார். நீண்டகாலம் அணியை வழிநடத்தும்போது இதெல்லாம் நடக்கும். நானும் கேப்டனாக இருந்திருக்கிறேன் என்பதால் எனக்கு தெரியும். 


அதேவேளையில், தேர்வாளர்கள் டி20 மற்றும் ஒருநாள் அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவதை விரும்பவில்லை. அதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு சிறந்த அணியில் நிறைய லீடர்கள் இருக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார். 


கங்குலி இவ்வாறு தெரிவித்திருந்த நிலையில் கோலி தன்னிடம் டி20 கேப்டன்சியில் இருந்து விலகியதாக கூறியபோது யாரும் தடுக்கவில்லை என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.