லங்கா பிரீமியர் லீக் தொடரில், கண்டி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் கொலம்போ ஸ்டார்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய சீக்கு பிரசன்னா அணியை வெற்றிக்கு இழுத்து சென்றார். இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஞ்சலோ பெரேரா தலைமையிலான கண்டி வாரியர்ஸ் அணியும், மேத்யூஸ் தலைமையிலான கோலம்போ ஸ்டார்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய கண்டி வாரியர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக கென்னர் லிவீஸ் 44 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.
கோலம்போ ஸ்டார்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த் சமீரா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய COLOMBO STARS அணிக்கு துவக்க வீரர் பதும் நிஷங்கா டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுக்க, அதன் பின் வந்த வீரர்களில் திலக்ஷி டி சில்வா மற்றும் அஷன் பிரியன்ஜன் 15 ஓட்டங்களிலும், மற்றொரு துவக்க வீரர் ஆஞ்சிலோ மேத்யூஸ் 29 ஓட்டங்களிலும் பவுலியன் திரும்ப, தினேஷ் சண்டிமல் ஆட்டத்தை கையில் எடுத்தார். சிறப்பாக விளையாடிய இவர் 27 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்படும் சூழ்நிலையில், ஆறு பந்துகளை ஒழுங்காக வீசினால் வெற்றி என்ற கணக்கில் கண்டி வாரியர்ஸ் அணி விளையாடியது.
ஆனால் அப்போது களத்தில் இருந்த அதிரடி வீரர் சீக்கு பிரசன்னா ஏற்கனவே 3 பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 14 ரன்கள் அடித்து களத்தில் நின்றார். 19.2-வது பந்தில் ஒரு இமாலய சிக்ஸர் அடித்து எதிரணிக்கு பயத்தை கிளப்பினார். அடுத்தடுத்த இரண்டு பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் என ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து 19.4 ஓவரிலே கொலம்போ ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் இறங்கி 6 பந்துகள் சந்தித்த சீக்கு பிரசன்னா 6 பந்தில் 32 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சந்தித்த 6 பந்துகளில் 5 பந்துகளை சிக்ஸருக்கு விரட்டி ரசிகர்களுக்கு அதிரடி விருந்து வைத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 533 என்பது குறிப்பிடத்தக்கது.