தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு நான் தயாராக இருக்கிறேன் எனவும் பிசிசிஐயிடம் தான் ஓய்வு கேட்கவில்லை எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடத்தயார். ஒருநாள் போட்டித் தொடருக்கான வீரர்கள் தேர்வில் நானும் இருக்கிறேன். நான் ஓய்வெடுக்க விரும்பவில்லை. எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை.


 






டெஸ்ட் அணி குறித்த விவாதத்திற்குப் பிறகு, தலைமை தேர்வாளர் என்னிடம் ஒருநாள் போட்டி கேப்டனாக இருக்க மாட்டேன் என்று கூறினார். எனது பொறுப்புகளுக்கு நான் நேர்மையாக இருந்தேன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ரோஹித் ஷர்மாவின் திறமைகளை அதிகம் இழக்க நேரிடும்” எனத் தெரிவித்தார். 


முன்னதாக, ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் தென்னாப்ரிகாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்திருக்கும் நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது. பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளானது. 


இதுகுறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் முன்னாள் கிரிக்கெட்டர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், தனது ட்விட்டர் பக்கத்தில் “ரோஹித் ஷர்மா வரவிருக்கும் டெஸ்டில் விளையாட முடியாது என்றும் விராட் கோலி  ஒருநாள் தொடரில் விளையாடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஓய்வு எடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அது எந்த நேரத்தில் எடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும். இது பிளவுக்கான ஊகங்களை உறுதிப்படுத்துகிறது. கிரிக்கெட்டின் மற்றொரு வடிவத்தை இருவரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார். 


இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு பேசிய இந்திய அணியின் முன்னாள்  கேப்டன் சுனில் கவாஸ்கர் “மக்கள் திடீரென அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது. இரண்டு வீரர்களும் எந்த தகவலும் சொல்லாத நேரத்தில், நாம் முடிவுக்கு வரக்கூடாது. ஆம், அசாருதீன் ஏதோ சொல்லியிருக்கிறார். ஆனால் என்ன நடந்தது என்பது குறித்து அவருக்கு ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், அவர் வெளியே வந்து நடந்ததைச் சொல்ல வேண்டும்.


இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமாக சேவை செய்திருக்கிறார்கள், சரியான தகவல் இல்லாமல், யாரும் அவர்கள் மீது விரல் நீட்டுவது நியாயமானது என்று நான் நினைக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். 


இதனிடையே பிசிசிஐ அதிகாரி ஒருவர் கோலி குறித்து பேசி இருக்கிறார். “இதுவரை, தென்னாப்ரிக்காவில் நடக்க இருக்கும் ஒரு நாள் தொடரில் இருந்து விலகுவதாக கோலியிடம் இருந்து எந்த கோரிக்கையும் பிசிசிஐயிடம் வைக்கப்படவில்லை. ஒரு வேளை அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தாலோ, வேறு சில காரணங்களால் விலகுவதாக இருந்தாலோ, அது பற்றி பின்னர் ஆலோசிக்கபப்டும். இப்போதைக்கு, தென்னாப்பரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கோலி விளையாடுவார் என்றே சொல்ல முடியும்” என தெரிவித்திருக்கிறார்.