இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நாளை தொடங்குகிறது
இந்நிலையில் எப்போதும் போட்டிக்கு முன்பாக இந்திய கேப்டன் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் முன்பாக இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் இம்முறை இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இன்று மாலை 3.30 மணிக்கு விராட் கோலி காணொலி மூலம் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி அடுத்த டெஸ்டில் நிச்சயம் விளையாடுவார் என்று உறுதியளித்திருந்தார்.
இந்தச் சூழலில் தற்போது விராட் கோலி விளையாடுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. விராட் கோலி கடந்த போட்டியில் களமிறங்காததால் நாளை தன்னுடைய 99 டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். அவருடைய 100ஆவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.
கேப்டவுன் மைதானத்தில் இந்தியா:
கேப்டவுன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 282 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியையும் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியை தோனி தலைமையிலான இந்திய அணி டிரா செய்தது.
கடைசியாக 2018ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் கேப்டவுன் டெஸ்டில் தோல்வி அடைந்தது. ஆகவே மொத்தமாக கேப்டவுனில் விளையாடியுள்ள 5 போட்டிகளில் இந்திய அணி 3ல் தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கேப்டவுன் மைதானத்தில் இந்திய டெஸ்ட் போட்டியை இதுவரை வென்றதே இல்லை.
மேலும் படிக்க: மாஸ்டர் ஸ்டோர்க் ஐடியா... - ட்விட்டரில் பதிவிட்ட கேகேஆர்... வெளுத்து வாங்கிய ஜடேஜா !