இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர், ரன் மெஷின் விராட் கோலி சமீபத்தில் பல கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்களால் "தோல்வியுற்ற கேப்டன்" என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
அவர் அவ்வாறு விமர்சிக்கப்பட காரணமாக கருதப்படுவது அவரது கேப்டன்சியின் கீழ் இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்பது தான். ஆனால், 34 வயதான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 68 போட்டிகளில் தலைமை தாங்கி 40 வெற்றிகளுடன் இந்திய அணியை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றார். அதேபோல், இந்திய அணி 95 ஒருநாள் போட்டிகளில் இவரது தலைமையில் களமிறங்கி 65 வெற்றிகளையும், 50 டி20 போட்டிகளில் 30 வெற்றிகளையும் கோலியின் தலைமையில் பதிவு செய்துள்ளது.
இருப்பினும், அவர் கேப்டனாக இருந்தபோது எந்தவொரு பெரிய ஐசிசி கோப்பையையும் இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றவில்லை. இது கோலியின் கேப்டன்சி மீது நிறைய விமர்சனங்களை ஏற்படுத்தியது. முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர்ரும், கோலி குறித்து விமர்சிக்க தயங்கவில்லை. மேலும் ஐசிசி போட்டிகளில் வென்றவர்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பதாகக் கூறினார்.
அதில் அவர் கூறியதாவது, "இந்தியாவின் கேப்டனாக இருக்கும்ப்போது அழுத்தம் இருக்கும் தான். அதற்காக இரண்டாம் அல்லது மூன்றாம் இடங்களைப் பெற்ற அணிகளை யாரும் நினைவில் கொள்வதில்லை. ஐசிசி போட்டிகளில் வென்றவர்களை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்கிறோம்" என்று பனேசர் ட்வீட் செய்துள்ளார்.
இதனிடையே விமர்சனங்கள் தன்னை எந்த நேரத்திலும் தீர்மானிக்கவில்லை என்றும், தனக்குக் கீழ் வந்த கலாச்சார மாற்றத்தைப் பற்றி பெருமைப்படுகிறேன் என்றும் கோலி கூறியுள்ளார்.
மேலும் அவர், " நீங்கள் போட்டிகளில் வெற்றி பெற விளையாடுகிறீர்கள். சாம்பியன்ஸ் டிராபி 2017, 2019 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2021 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றில் நான் கேப்டனாக இருந்தேன். மூன்று (நான்கு) ஐசிசி போட்டிகளுக்குப் பிறகு, நான் தோல்வியடைந்த கேப்டனாக கருதப்பட்டேன், ”என்று ஆர்சிபி பாட்காஸ்டில் கோலி கூறினார்.
“அந்தக் கண்ணோட்டத்தில் நான் என்னை ஒருபோதும் மதிப்பிடவில்லை; நாங்கள் ஒரு குழுவாகவும் கலாச்சார மாற்றமாகவும் சாதித்ததை எப்போதும் எனக்கு பெருமையாக இருக்கும். ஒரு போட்டி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நடக்கும், ஆனால் ஒரு கலாச்சாரம் நீண்ட காலத்திற்கு நடக்கும்," என்று அவர் விளக்கினார்.
கோலி 2011ல் ஐசிசி உலகக்கோப்பையையும், 2013ல் சாம்பியன்ஷ் டிராபியும் வென்றார். ஆனால், இரண்டு முறையும் கோலி தோனியின் தலைமையின் கீழ் வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலியின் தலைமையின் கீழ், இந்தியா 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியை எட்டியது, அங்கு பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. 2019 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.