Virat Kohli On Rohit Sharma: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து முன்னாள் கேப்டன் விராட் கோலி கூறியுள்ள கருத்து அனைவராலும் கவனிக்கப்படும் விதமாக  உள்ளது.  


2021 - 2023ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக ஐசிசி தரப்பில் இரு அணி வீரர்களிடம் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ரன் மிஷின் எனப்படும் அதிரடி ஆட்டக்காரருமான விராட் கோலி  இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 


அதில் அவர், நான் எப்போதும் ரோகித் சர்மாவின் ஆட்டத்தைப் பார்த்து பிரமிக்கிறேன். இவர் இந்திய அணிக்காக அவர் மூன்று தரப்பு கிரிக்கெட்டிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பான தொடக்கத்தினை ஏற்படுத்தி தந்துள்ளார். இவரது சிறப்பான ஆட்டத்தால் பின் வரிசையில் களமிறங்கும் வீரர்களுக்கு அழுத்தம் இல்லாத சூழல் ஏற்படுகிறது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் அவரது பார்ம் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.  அதேபோல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா செய்துள்ள விசயம் என்பது மிகவும் அற்புதமானவை. ஒரு தொடக்க வீரராக களமிறங்கி அணியை வெற்றிக்கு கொண்டு செல்வது அவ்வளவு எளிதான வேலை இல்லை என விராட் பேசியுள்ளார். 


ரோஹித் இந்த ஆண்டு நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40.33 சராசரியுடன் 242 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் விளாசியுள்ளார்.


ஒட்டுமொத்தமாக, ரோஹித் 49 போட்டிகளில் விளையாடி 45.66 சராசரியில் 3379 ரன்கள் எடுத்துள்ளார். அவர் ஒன்பது சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் அடித்துள்ளார்.


ரோகித் சர்மா குறித்து விராட் கோலி இவ்வாறு கூறியுள்ளது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மத்தியில் பனிப்போர் நீடித்து வருவதாக ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்பதற்கு முன்னர் இருந்தே கூறப்பட்டு வந்த நிலையில், விராட் கோலியின் இந்த கருத்து அனைவரது மத்தியிலும் சற்று ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த ஆண்டில் விராட் கோலி சரியான பார்மில் இல்லாதபோது இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவிடம், விராட் கோலி குறித்து ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் கேள்வி கேட்கப்பட்டது, ஆனல் அப்போதெல்லாம், ஒரு கேப்டனாக ரோகித் சர்மா விராட் கோலி குறித்து மிகவும் பெருமிதமாகவே பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.