உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இன்று (07.06.2023) தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓவல் மைதனாத்தின் புகைப்படத்தை கிரிக்கெட் வீரர், வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் பகிர்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
தினேஷ் கார்த்திக் ட்வீட்:
ஓவல் மைதானத்தின் பிட்ச் நிலவரம் பற்றிய புகைப்படத்துடன் தினேஷ் கார்த்திக் டிவீட் செய்துள்ளார். அதில்,” பிட்ச் தயாராக உள்ளது; நீங்கள் டாஸ் வென்றால் பவுலிங் அல்லது பேட்டிங் தேர்வு செய்வீர்களா? “ என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.
பழமை வாய்ந்த ஓவல் மைதானம்:
ஓவல் மைதானத்தை பொறுத்தவரையில் டாஸ் வெல்ல வேண்டியது அவசியம். இந்த மைதானம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டு தரப்பினருக்கும் சாதகமானதாக இருக்கும். ஆனாலும், பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவதற்கு ஏதுவாக இருந்தாலும், அதே அளவிற்கு பந்துவீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் ஓவல் மைதானம் இருக்கும். இதனால், இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வெல்பவர்களுக்கு ஆட்டம் சாதமாக அமைய வாய்ப்பிருப்பதால் டாஸ் யார் வெல்கிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடைசி 2 நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகளவில் காணப்பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், முந்தைய 3 நாட்கள் ஆட்டம் காரணமாக மைதானம் வறண்டு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியிருக்கும். அப்போது, பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். இதனால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இந்த மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் குறைந்த அளவிலே காணப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா நேருக்கு நேர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இதுவரை மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, இதில் ஆஸ்திரேலியா 44 வெற்றிகளுடன் தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் இந்தியா 32 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை நடந்தது என்ன?
ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, தோல்வி நிலவரங்கள் குறித்து கீழே விரிவாக காணலாம்.
இதுவரை நடைபெற்ற போட்டிகள்: 104
சொந்த அணி வெற்றி (இங்கிலாந்து) : 43
வருகை தந்த அணி வெற்றி : 23
ஆட்டம் டிராவில் முடிந்தது : 37
முதலில் பேட் செய்த அணி வெற்றி : 37
2வது பேட் செய்த அணி வெற்றி : 29
அதிகபட்ச ஸ்கோர்: 913 ரன்கள் ( ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து 1938)
குறைந்த ஸ்கோர் : 44 ரன்கள் ( இங்கிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலியா 1896)
முதல் இன்னிங்ஸ் சராசரி ரன்கள் : 343 ரன்கள்
2வது இன்னிங்ஸ் சராசரி ரன்கள் : 304 ரன்கள்
3வது இன்னிங்ஸ் சராசரி ரன்கள் : 238 ரன்கள்
நேரடி ஒளிபரப்பு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் இந்த இறுதிப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். தூர்தர்ஷனில் போட்டியின் நேரடி ஒளிபரப்பு இலவசம். இது தவிர, போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மூலம் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும், இதன் மூலம் நீங்கள் மொபைலிலும் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம்.